Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தை ஆதரித்தல். "முஸ்லிம் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கண்டி ஃபோரம் வேண்டுகோள்."

1951ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து எழுந்துள்ள கோரிக்கைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. முஸ்லிம் கல்வியாளர்கள், ஆய்வறிவாளர்கள், தொழில்வாண்மையாளர்கள், சிவில் சமூகத்தினர், பெண்கள் அமைப்புகள் எனப் பலதரப்பட்டவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய சீர்திருத்தத்துக்காகக் குரல்கொடுத்து வந்துள்ளனர்.

1970, 1984, 1990, 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தாலும் முஸ்லிம் அமைப்புகளாலும் இதைப்பற்றி ஆராய்வதற்குப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. கடைசியாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சலீம் மர்சூப் அவர்கள் தலைமையில் முன்னாள் நீதி அமைச்சர் மிலிந்த மொரக்கொட அவர்களால் 2009ல் நியமிக்கப்பட்ட 19 உறுப்பினர்களைக் கொண்ட குழு தனது அறிக்கையைத் தற்போதைய நீதி அமைச்சரிடம் 2018 ஜனவரியில் சமர்ப்பித்தது.
எனினும், ஒன்பது ஆண்டுகால கடும் உழைப்பு, பரந்துபட்ட கலந்தாலோசனைகளின் பின்னரும்கூட இக்குழு ஏகமனதாக ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் போன துர்ப்பாக்கியம் நம் கவனத்துக்குரியது. இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கருத்துவேறுபாடுகள் நிலவுவதே இதற்குக் காரணமாகும். இக்குழு இரண்டாகப் பிளவுபட்டு ஒரே அறிக்கையில் இரண்டு வேறுபட்ட ஆலோசனைகளை ( ஆலோசளைகள் 1, ஆலோசனைகள் 11) சமர்ப்பித்துள்ளது.
இருப்பினும், இக்குழுவின் 9 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு சலீம் மர்சூப் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட, அந்த அறிக்கையின் மிகப் பெரும்பகுதியை உள்ளடக்கும், ஆலோசனைகள் 1 குறிப்பாக முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை பாராபட்சமானவை என பரவாலாகக் கருதப்படும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பான விடயங்களைப் பொறுத்தவரை குர்ஆனின் குறிக்கோளான பால் சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அடைவதற்குரிய சாதகமான முற்போக்கான நடவடிக்கையாக நாம் கருதுகின்றோம். ஒரு கணிசமான தொகையினரான உலமாக்களும், முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் ஆய்வறிவாளர்களும், பெண்கள் அமைப்புகளும் இத்தகைய சீர்திருத்தங்களுக்காகவே நீண்ட காலமாகக் குரல்கொடுத்துவந்துள்ளனர்.
அதிஷ்டவசமாக, இறுதியில் சலீம் மர்சூப் குழுவினர் முஸ்லிம் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யும் வகையிலும் சமமான பிரசைகள் என்ற வகையில் அவர்களது கௌரவத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் முழுமையான ஆலோசனைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இவை ஷரியாவுக்கு உட்பட்டவையே என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இது எவ்வாறாயினும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் செயலாளரும் தலைமைதாங்கும் மாற்றுக் குழுவினரால் ஆலோசனைகள் 11 சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சலீம் மர்சூப் குழுவினரின் ஆலோசனைகளிலிருந்து இவை மிக முக்கியமான அம்சங்களில் முரண்படுகின்றன. “முஸ்லிம் சட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் அவசரமான தேவை நிருவாகச் சீர்திருத்தமே தவிர சட்டத்தைத் திருத்துவதல்ல“ என்பதே அவர்களின் கருத்தாகும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் எவ்வகையான திருத்தங்களுக்கும் அவர்கள் எதிராக இருக்கின்றனர். .இச்சட்டம் ஷரியாவின் அடிப்படையிலானது என்றும் ஆகையால் அது மாற்றமுடியாதது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
கண்டி ஃபோறம் தற்போது நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை சில இஸ்லாமிய அறிஞர்களின் ஆலோசனைகளுடன் கவனமாகப் பரிசீலனை செய்து, இச்சட்டம் அதன் இப்போதைய முழுமையான வடிவில் ஷரியாவை, அதாவது குர்ஆனையும் சுன்னாவையும், கறாராகப் பின்பற்றவில்லை என்பதையும், அதன் சில பகுதிகள், பெண்களுக்குப் பாராபட்சம் காட்டுவதாகவும், இஸ்லாம் என்ற பெயரில் பழங்காலச் சமூக நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதையும், கடந்த நூறு ஆண்டுகளில் ஏனைய முஸ்லிம் நாடுகளைப் போலவே இலங்கை முஸ்லிம் சமூகமும் பாரிய சமூக மாற்றங்களுக்கு ஆளாகி இருப்பதையும் கவனத்தில் கொண்டு, பால்நிலைச் சமத்துவம் பற்றிய குர்ஆனிய குறிக்கோளுக்கு இணக்கமான வகையில் இச்சட்டத்தின் சிலபகுதிகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
சமத்துவம், சமூக நீதி என்பன இஸ்லாத்தின் இரண்டு அடிப்படையான மூலக்கோட்பாடுகள் ஆகும்.
தனியார் சட்டங்களை உருவாக்கும் போதும் அவற்றைத் திருத்தும் போதும் இவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவ்வகையில் இப்போது முன்வைக்கப் பட்டுள்ள திருத்தங்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு உலமாக்களாலும் இஸ்லாமிய அறிஞர்களாலும் விளக்கப்பட்ட வகையில் ஷரியாவின் கட்டமைப்புக்குள் அடங்குபவை என்பதையும், மலேசியா, இந்தோனேசியா, எகிப்து, மொறோக்கோ, டூனீசியா போன்ற பல இஸ்லாமிய நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை என்பதையும் நாம் அழுத்திக் கூற விரும்புகின்றோம். கடந்த காலங்களில் ஷரியா வெவ்வேறு மத்ஹப்புகளாலும், தற்கால உலகில் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களாலும் தங்கள் கால சமூக வரலாற்றுச் சூழல்களுக்குப் பொருத்தமான வகையில் வெவ்வேறுவிதமாக விளக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. இலங்கை முஸ்லிம்களாகிய நாம், நாம் வாழும் சமூகப் பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில், கண்டி ஃபோறம் ஏற்கனவே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக பின்வரும் ஏழு முக்கிய அம்சங்களில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைகளைத் தயாரித்தது.
அவையாவன – 1) திருமணத்துக்கான குறைந்த வயதெல்லை, 2) திருமணத்துக்கான மணமகளின் சம்மதம், 3) பலதார மணம், 4) மஹரும் சீதனமும், 5) விவாகரத்து, 6) தாபரிப்பு, 7) பெண்களை காழிகளாகவுத் விவாகப் பதிவாளர்களாகவும் நியமித்தல். அத்தோடு ஒரு குறிப்பிட்ட மத்ஹப்பை மட்டும் இறுக்கமாகப் பின்பற்றுதல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இவை தொடர்பாக எமது ஆலோசனைகளை சலீம் மர்சூப் குழுவுக்கு 2017ல் நாம் அனுப்பினோம். அது பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது. எமது ஆலோசனைகள் எம்முடையவை மட்டுமல்ல. பல்வேறு முஸ்லிம் ஆய்வறிவாளர்களும், தொழில் வாண்மையாளர்களும், பெண்கள் அமைப்புகளும் நீண்ட காலமாக இவற்றை ஒத்த சீர்திருத்தங்களையே பகிரங்கமாகக் கோரிவந்துள்ளனர். இந்த ஆலோசனைகள் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் சமூக அந்தஸ்த்தை மேம்படுத்துவதற்கும், பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் அத்தியாவசிய மானவை என நாம் கருதுகிறோம்.
சலீம் மர்சூப் அவர்கள் எமது ஆலோசனைகளால் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்து எமது ஆலோசனைகள் அனைத்தையும் தமது இறுதி அறிக்கையில் ஒப்புதலோடு உள்ளடக்கியுள்ளார் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும்..
சலீம் மர்சூப் அவர்களால் கௌரவ நீதி அமைச்சர் அவர்களிடம் ஜனவரி 2018ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலம்மாவும் முஸ்லிம் சமூகத்திலுள்ள சில பழமைவாத இயக்கங்களும் இந்த ஆலோசனைகளையும் சமூகத்தின் முற்போக்கான இயக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் நாடுபரந்த அளவில் இந்த ஆலோசனைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றனர்.
இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக இறுதியில் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் 11. 07. 2019ல் பாராளுமன்றத்தில் சந்தித்து சலீம் மர்சூப் குழுவினரின் ஆலோசகைளில் மிக முக்கியமான பல அம்சங்களை ஏற்றுக்கொண்டதோடு அமைச்சரவையில் இது தொடர்பான சட்டமூலம் ஒன்றைச் சமர்பிப்பதற்கும் உடன்பட்டனர். இது வரலாற்று முக்கியத்துவம் உடைய ஒரு நிகழ்வாகும்
ஆயினும், மீண்டும் துரதிஷ்டவசமாக ஜம்மியத்துல் உலமா முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்த முயற்சிகளைச் சீர்குலைக்க விடாப்பிடியாக முயற்சிக்கின்றது. ஜம்மித்துல் உலமாவின் பொதுச் செயலாளர் 18. 07. 2019ல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் திருத்தத்துக்கான ஆலோசனைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கும் முன்னர் அவற்றில் உள்ள சர்ச்சைக்கிடமான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான ஒரு அவசரச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு இணங்காவிட்டால் அது அவர்களின் வரலாற்றுத் துரோகமாகக் கருதப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷரியா பற்றிய தங்களது மிகப் பழமைவாத, ஏற்றுக்கொள்ளமுடியாத விளக்கங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்வரை ஜம்மியத்துல் உலமா திருப்தி அடையாது என்பதையே இது காட்டுகின்றத.
சமய விவகாரங்களில் தங்களுக்கே ஏகபோக அதிகாரம் உண்டு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஷரியா பற்றிய தங்கள் வரையறைக்குட்பட்ட, பழமைவாத புரிதல் காரணமாக முஸ்லிம் உலகின் முற்போக்கான செல்நெறிக்கு அவர்கள் எதிராக இருக்கிறார்கள். இஸ்லாத்தில் பால்நிலைச் சமத்துவம் என்ற கருத்துக்கு அவர்கள் எதிராக இருக்கிறார்கள். இவ்விவகாரத்தில் குர்ஆன், சுன்னா பற்றிய அவர்களது புரிதல் முற்றிலும் நேர் பொருள் (literal meaning) சார்ந்ததாகவும் குர்ஆனின் இலட்சியத்துக்கு எதிரானதாகவும் இருப்பதாகத் தோன்றுகின்றது.
குர்ஆனின் சில வாக்கியங்களை அவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணியில் விளங்கிக்கொள்ள அவர்களால் முடியவில்லை. பெண்களின் குறைந்தபட்சத் திருமண வயதை அதிகரிப்பதும், பெண்களை காழிகளாகவும், விசேட காழிகளாகவும் விவாகப் பதிவாளர்களாகவும் நியமிப்பதும் ஷரியாவுக்கு விரோதமானது என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பல முஸ்லிம் நாடுகளில் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டிருப்பதையும், பெண்கள் இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதையும், உலகம் முழுவதிலும் உள்ள பல கற்றறிந்த உலமாக்கள் அவற்றுக்கு ஒப்புதல் அளித்திருப்பதையும் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
ஆகவே, கீழே ஒப்பமிடும் கண்டி ஃபோறம் உறுப்பினர்களாகிய நாங்கள், முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவித சமரசங்களும் இன்றி, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்குமாறும், பாராளுமன்றத்தில் அதைச் சட்டமாக இயற்றுவதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். பொதுவாக இலங்கை முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக முஸ்லிம் பெண்களினதும் முன்னேற்றத்தில் இது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையும்.
ஒப்பம்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான்,
ஜே. எம். நிவாஸ்,
பேராசிரியர் எம். ஏ. எம். சித்தீக்,
பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ்,
பேராசிரியர் எம். ஐ. மவ்ஜுத்,
கலாநிதி ஏ.எல். எம். மஹ்றூப்,
கலாநிதி எம். இசற். எம். நஃபீல்,
கலாநிதி ஏ.எஸ். எம்.
நவ்பல், ஜே. எம் முபாறக்,
யு. எம் பாஸில்

Post a Comment

0 Comments