Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் திண்டாடும் அமெரிக்கா!

அமெரிக்காவில் இதுவரை 85,594 பேர் கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. இதில் 1,300 வரையிலான இறப்புகளும் அடங்கும். தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் தரவுகளின்படி, இது வேறு எந்த நாட்டிலும் பதிவு செய்யப்படாத எண்ணிக்கையாகும்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்ததை  நினைவூட்டலாம்.

அமெரிக்கா கொரோனா வைரஸ் பரவலின் மத்திய நிலையமாக மாறும் சூழ்நிலை  இருப்பதாக அந்த எச்சரிக்கை சொன்னது. இன்று அந்த எச்சரிக்கை சரியாகவே இருக்கிறது.

அமெரிக்காவில்  கொரோனா  பரவலின் மையமாக மாறியுள்ள நியூயோர்க்கில் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர்.

சீனா, இத்தாலி மற்றும் பிற நாடுகளை  விஞ்சிய நிலையில்  கொரோனா  கோவிட் -19 தொற்றாளர்களினால்  அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

நேற்று வியாழக்கிழமை 5,300 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நோயாளிகளினால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நியூயோர்க் நகர மருத்துவமனைகள் நோயாளிகளினால்  முற்றுகையிடப்பட்டுள்ளன -  குயின்ஸில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட் மருத்துவமனை  கொரோனா  நோயாளிகளுக்காக  545 படுக்கைகளையும் ஏனைய  நோயாளிகளை வெளியேற்றி விட்டு தயார் படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

எல்ம்ஹர்ஸ்ட் மருத்துவமனையில்  அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் டாக்டர் கொலின் ஸ்மித் மருத்துவமனை மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறியிருப்பதாகவும், மருத்துவமனை பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், அவர்கள் நோய்வாய்ப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இறந்த சடலங்களை வைப்பதற்கு  மருத்துவமனை நிர்வாகம் ஒரு குளிரூட்டப்பட்ட வாகனத்தை  வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பதாகவும்  டாக்டர் கொலின் ஸ்மித் கூறியிருப்பதாக தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments