Ticker

6/recent/ticker-posts

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த நவீனுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - - முன்னாள் அமைச்சர் திகாம்பரம்

(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களும் இம்முறை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கே வாக்களிப்பார்கள். கடந்த முறைபோல் இம்முறையும் மாவட்டத்தில் எமது அணியே வெற்றி நடைபோடும் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் பின்னர் நுவரெலியாவில் 19.03.2020 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

"நுவரெலியா மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிடும் எமது வெற்றி ஏரத்தாள உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தலின்போது இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப்பெற்று இம்மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றார். எனவே, பொதுத்தேர்தலிலும் நுவரெலியா மாவட்டத்தில் எமது வெற்றி தொடரும்.

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர். எனவே, வாக்குகளை சிதறடிப்பதற்காக சிறு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு, மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். 

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடனேயே சஜித் பிரேமதாச புதிய கூட்டணியை உருவாக்கினார். எனினும், சஜித், ரணில் அணிகளென இரு தரப்புகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் மக்களிடம் நாம் கருத்து கோரினோம். சஜித் பக்கம் நிற்குமாறு கூறினார்கள். இதன்படியே நாம் செயற்படுகின்றோம். ஐந்து ஆசனங்களை எமது அணியால் கைப்பற்றமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேவேளை, நவீன் திஸாநாயக்க என்பவர் எமது மக்களுக்கு துரோகியாவார். டீல் காரர்களே யானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தேயிலை சபைக்கு நிதி அமைச்சால் நிதி அனுப்பட்டும் 50 ரூபாவை நவீனே தடுத்து நிறுத்தினார். தமிழ் மக்கள் மட்டுமல்ல இம்முறை சிங்கள மக்களும் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

நாட்டில் தற்போது கொரைனோ வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தோட்டப்பகுதியிலும் இது பரவினால் மோசமான நிலை ஏற்படும். எனவே, தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். " - என்றார்.

Post a Comment

0 Comments