Ticker

6/recent/ticker-posts

தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கம்பனிகளும் முற்கொடுப்பனவை வழங்க வேண்டும் - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)

"கொரோனா' வைரஸ் அச்சுறுத்தலால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு மானிய அடிப்படையில் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கம்பனிகளும் முற்கொடுப்பனவை வழங்கவேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

நுவரெலியாவில் 19.03.2020 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,

" உலக சந்தையில் இன்று மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது. இதனால் எல்லா பொருட்களின் விலைகளும் குறைவடைந்து வருகின்றன. இந்நிலையில் டின்மீன், பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக இந்த அரசாங்கம் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. கொரோனா வைரஸ் அச்சுறுத்ததால் வேலைவாய்ப்பு குறைவடைந்து, பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, அவர்களுக்கு மானிய அடிப்படையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும். அதேபோல் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு முற்கொடுப்பனவை (எட்வான்ஸ்) பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பனிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும், மக்களின் மனத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இடம்பிடித்துவிட்டது. எனவே, பொதுத்தேர்தலில் அவர் தலைமையில் வெற்றிபெறுவோம்." - என்றார்.

Post a Comment

0 Comments