கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பியதாக இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹீலர் பாஸ்கர் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தென்னிந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 18-ஆம் திகதி தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது குறித்து மாற்று முறை சிகிச்சை தருவதாக கூறி வரும் ஹீலர் பாஸ்கர் ஓடியோ ஒன்றின் மூலம் வதந்தி பரப்பியாபக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த ஓடியோவில் ஹீலர் பாஸ்கர் கொரோனா இலுமினாட்டிகளின் வேலை. என்றும் சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டு கொன்றுவிடுகிறார்கள் என்றும். அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்றும் கூறியிருப்பதாக அறிய வருகிறது.
இந்த ஓடியோக்களை சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்ததையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் ஹீலர் பாஸ்கரை தமிழ்நாடு குனியமுதூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹீலர் பாஸ்கர் மாற்று முறை மருத்துவத்தை கடைப்பிடித்து வருவதுடன். வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பது, மருந்தில்லா மருத்துவத்திற்கு மாறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவராவார்.
மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாமை ஹீலர் பாஸ்கர் விளம்பரப்படுத்தியதை அடுத்து அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments