ஜனாதிபதி மற்றும் பிரதமரை விமர்சிப்பதையும், தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத் தரப்பினரை விமர்சிப்பதையுமே முஸ்லிம் கட்சியின் தலைவர்கள் பலரும் இன்று செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் குதர்க்கமாகப் பேசிவருவது கவலை தருவதாக, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
உடுநுவர தொகுதியில் வேகிரிய கிழக்கு, கெஹெல்வத்த, புவெலிகட, கெட்டக்கும்புற, குருந்துவத்த, நியு எல்பிட்டிய, முருத்தகஹமுல, கல்கமுவ ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எதிராக செயற்படப் போவதில்லை. ஆனால், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், முஸ்லிம் மக்களை அச்சம் காட்டி வைத்திருக்கின்றார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவை பயங்கரமான ஒருவராகச் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் முஸ்லிம் தலைவர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களினால், முஸ்லிம் சமூகம் ஏமாந்து விடக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்கு எதிராக வாக்களித்த மக்களை அடக்கி ஆள வேண்டும் எனும் இறுமாப்போடு, இந்தத் தேர்தலை அரசாங்கம் நடாத்த முனைவதாக அண்மையில் முஸ்லிம் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தி இருந்தார். இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் இதன் பிறகிலிருந்தாவது விட்டு விடவேண்டும். எதிர்காலத்தில் தங்களது சமூகத்திற்கு தாங்கள் என்ன செய்யப் போகின்றோம். எந்த விதமான நன்மைகளைப் பெறும் திட்டங்களை அமுல்படுத்தப் போகின்றோம். அரசாங்கத்துடன் பேசி சமூகத்திற்காக என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். எனும் விடயங்களை விட்டு விட்டு, இவ்வாறான செயல்களில் அவர்கள் இறங்கியிருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ முஸ்லிம்களுக்குத் தீங்கு இழைக்க ஒருபோதும் அனுமதிக்காதவர். இந்த விடயத்தை குறிப்பாக, முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், ஜனாதிபதிக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைத் தூரமாக்கி உள்ளமை தொடர்பாக, இன்று முஸ்லிம் சமூகம் சிந்திக்க ஆரம்பித்துள்ளது என்றார்.

0 Comments