Ticker

6/recent/ticker-posts

தம்மிக பெரேராவுக்கு எதிராக உயா் நீதிமன்றில் மனு தாக்கல்!


வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக உயா் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளா் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமடையும் பட்சத்தில், பொதுத் தேர்தலில் மாவட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் வேட்புமனுவில் பெயர் இடம்பெற்றுள்ள அல்லது தேசியப்பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள ஒருவரே நியமனத்திற்குத் தகுதியுடையவர் என மனுதாரர் குறிப்பிடுட்டுள்ளாா்.

எவ்வாறாயினும், தம்மிக்க பெரேராவின் பெயர் கடந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களிலோ அல்லது தேசியப்பட்டியலிலோ உள்ளடக்கப்படாத நிலையில், தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்தின் வெற்றிடமொன்றுக்கு நியமித்தமை அரசியலமைப்பின் 99 (ஏ) சரத்திற்கு முரணானது என இந்த மனுவில்  சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

தம்மிக்க பெரேரா வங்கி, நிதி நிறுவனங்கள், எரிசக்தி மற்றும் தோட்ட வா்த்தக துறை உட்பட பல துறைகளில் ஒரு முக்கிய வர்த்தகராக  இருந்து வருவதால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று அதன் ஊடாக அமைச்சரவை அங்கத்தவராக நியமிக்கப்பட்டமை, முழுமையாக பக்கச்சார்பாக செயற்படும் நிலைமை உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த தம்மிக்க பெரேராவின் நியமனம், அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கான அடிப்படை  விதிகளை மீறுவதாக உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் இம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உட்பட பலரின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments