ஆகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கையை வந்தடைய இருக்கும் யுவாங் வேங் 5 (Yuan Wang 5) என்ற சீன உளவுக் கப்பல் தொடர்பான சா்ச்சை சூடுபிடித்திருக்கிறது. இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய புவிசார், பிராந்திய அரசியலில் இந்த விவகாரம் ஒரு வித பதற்றத்தை ஏற்பட்டுத்தியிருக்கிறது..
பொருளாதார, அரசியல் நெருக்கடியிலும், பெரும் கொந்தளிப்பிலும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு தலையிடியையும், பாரிய அழுத்தத்தையும் இந்தக் கப்பல் விவகாரம் கொண்டு வந்து சோ்த்திருக்கிறது.
ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பல் தொடர்பில் இந்தியா தனது கடும் ஆட்சேபனைகளை இலங்கைக்கு முன்வைத்துள்ளது. இந்தக் கப்பலின் வருகைக்கு கடந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இந்தியத் தரப்பிற்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கட்டான நிலையில் இலங்கை!
சுதந்திரத்திற்கு பின்னரான ஏழு தசாப்தங்களில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிா்நோக்கியுள்ள இந்த வேளையில், இந்தியா சுமார் 4 பில்லியன் அமொிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியிருக்கிறது.
இந்த இக்கட்டான சந்தா்ப்பத்திலேயே சீன உளவுக் கப்பல் பிரச்சினை உருவாகி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் தலையைச் சுற்ற வைத்திருக்கிறது. ஒரு புறம் சீனாவையும், மறுபுறம் இந்தியாவையும் பகைத்துக் கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த கப்பல் விவகாரம், இந்தியாவும் சீனாவும் மட்டும் மோதிக்கொள்கின்ற ஒரு பிராந்திய அரசியல் விவாகாரமாக மட்டும் பாா்க்கப்படக் கூடாது. மாறாக, இலங்கையின் அரசியல், பொருளாதார பிரச்சினையின் முக்கிய அம்சமாக பாா்க்கப்பட வேண்டும். இலங்கையில் பொருளாதாரம் இன்று நலிவுற்று நாசமடைந்திருக்கிறது. ஜனநாயகம் கேள்விக் குறியாகி இருக்கிறது. நாளுக்கு நாள் வளா்ந்து வரும் அரசியல் கொந்தளிப்பு நாட்டை ஆட்டங்கான வைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா வழங்கியுள்ள உதவிகளும், சர்வதேச நாணய நிதியம் சீனாவின் கடன் தொடா்பாக வழங்கியுள்ள கடன் மீள் கட்டமைப்பு தொடா்பான வலியுறுத்தல்களும் இலங்கையை நெருக்குவாரத்தில் தள்ளியுள்ளன.
சீனாவின் கடன் மீளாய்வின் பிறகே சா்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பின்னணியிலேயே சீனா தனது புவிசாா் மற்றும் பிராந்திய அரசியலின் காயை மெதுவாக நகா்த்தியிருக்கிறது. சா்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு சீனாவின் கடன் மீளாய்வு முடிவு இலங்கைக்கு அவசியமானது. சீனாவை பகைத்துக் கொள்ள முடியாத திண்டாட்டத்தில் இலங்கை திணறிப்போய் இருக்கிறது.
இந்தியாவுடனான உறவும் இலங்கைக்கு இன்றியமையாதது. இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படுவதை ஒருபோதும் விரும்பாத நிலையில், பிராந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அழுத்தத்தைத் தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதும், இந்தியாவை சமாளிப்பதில் இலங்கை இதுவரை எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லையென்றே அறிய வருகிறது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் (Arindam Bagchi), இந்த சீனக் கப்பலின் இலங்கை வருகை பற்றி ஊடகங்கள் வினவிய போது,
“ஆகஸ்ட் மாதம் துறைமுகத்திற்கு இந்தக் கப்பலின் உத்தேச விஜயம் பற்றிய அறிக்கைகள் எங்களுக்குத் தெரியும். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது என்பதை மட்டும் கூறுகிறேன். இது ஒரு தெளிவான செய்தியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்ற பதிலை அவா் முன் வைத்தாா்.
இலங்கையில் கொந்தளிப்பான, அமைதியற்ற சூழ்நிலையில் நிலவும் போது சீனா ஏன் தனது உளவுக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்? என்ற கேள்வியை தற்போது இந்திய ஊடகங்கள் எழுப்பி வருகின்றன.
சீனாவின் இந்த உளவு கப்பலால் நடாத்தப்படவிருக்கும் வேவு பார்க்கும் வேலைகள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்து வருவதாகவும், இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் ஏதேனும் அரசியல், ராணுவ ரீதியலான தொடா்புகள் உள்ளதா என்ற சந்தேகம் இந்தியாவுக்கு இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சீனாவின் யுவாங் வேங் 5 உளவுக்கப்பல் ஆகஸ்ட் ஆகஸ்ட் 17 ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சீனா திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கப்பல் வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று இலங்கையில் உள்ள சீனாவின் “ஒரு பட்டி ஒரு பாதை” என்ற (Belt and Road Initiative) திட்டத்தின் இயக்குனர் யசிரு ரணராஜா தெரிவித்துள்ளாா்.
தற்போது இந்தக் கப்பல் தைவானைக் கடந்து இலங்கையின் ஹம்பாந்தோட்டை நோக்கிப் பயணிப்பதாகவும் ரணராஜா டுவிட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். யுவான் வாங் 5 இன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை தாித்து நிற்கும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகவும் அவா் அந்த டுவீட் பதிவில் தொிவித்துள்ளாா்.
இந்தியப் பெருங்கடலை சீனா தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தி வருவதாக இந்தியா மற்றும் அமொிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தக் கப்பல் விவகாரம் பிராந்தியத்தில் புதிய சா்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். 2014 ம் ஆண்டு, ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தாித்து நின்றது. அவ்வேளை, இந்தியா தனது கடுமையான கோபத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதே போல, 2021ம் ஆண்டு எவ்வித அனுமதியும் பெறாமல் யுரேனியம் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து பெரும் சா்ச்சையைக் கிளப்பியது.
2014ம் ஆண்டு இலங்கைக்கு வந்த நீா்மூழ்கிக் கப்பலை விட இந்த யுவாங் வேங் 5 என்ற கப்பல் மிகவும் சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் கொண்டது என்றும் தென்னிந்தியாவின் துறைமுகங்களிலுள்ள தகவல்களை இலகுவாக கைப்பற்றக் கூடிய திறன் இந்தக் கப்பல் பெற்றிருக்கிறது எனவும் எக்கொனொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் கடல் ஆக்கிரமிப்பு?
மியான்மாா் முதல் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் வரையிலான சீன உள்கட்டமைப்பு திட்டங்களின் “இரட்டை” பயன்பாடுகள் குறித்து இந்தியா நீண்டகாலமாக கேள்வி எழுப்பி வந்திருக்கிறது. சீனாவின் இத்தகைய நகா்வுகள் இந்தியாவின் நலன்களுக்கு நேரடி சவாலாக அமையும் என்று இந்தியா தொடா்ந்தும் நம்பி வருகிறது.
சமீப காலமாக, இந்தோ-பசிபிக் பகுதியைச் சுற்றி சீனா தனது இராணுவ பலத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில், இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ‘பரஸ்பர அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு’ என்ற ரீதியில் சீனா நிர்மாணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், காலப்போக்கில், கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகியதால், அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் 2017ம் ஆண்டு அதை தனியார்மயமாக்க முடிவு செய்தது.
துறைமுக கட்டுமானத்தில் சீனா ஏற்கனவே முதலீடு செய்திருந்ததால், சைனா மெர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங் (China Merchants Port Holdings Co) நிறுவனத்திற்கே 99 வருட குத்தகைக்காக வழங்கப்பட்டது. இதன் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமையை சீனா இலகுவாக பெற்றுக் கொண்டது.
சீனாவின் இராணுவ வலிமை மற்றும் இரட்டைப் பயன்பாட்டுக் கொள்கைகளால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க நடவடிக்கைகளை முன்னேற்றத் தொடங்கியது. தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியை சீனா தனது கடல்சாா் அரசியலின் கேந்திர நிலையமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
யுவான் வாங் 5 கப்பல்
சீனாவின் அதிநவீன உளவுக்கப்பல்களில் ஒன்றுதான் இந்த, யுவான் வாங் 5 என்ற கப்பல். இருந்த இடத்தில் இருந்தே, தம்மைச்சுற்றியுள்ள 750 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தையும், கடலுக்கு அடியில் இருந்து வானில் சுற்றும் செயற்கைக்கோள்கள் வரை அனைத்தையும் உளவுப் பார்க்கக்கூடிய திறனை இந்தக்கப்பல் பெற்றிருக்கிறது.
யுவான் வாங் 5 என்பது “யுவான் வாங்” தயாாிப்பு வரிசையில் மூன்றாம் தலைமுறைக் கப்பலாகும்.
இந்த கப்பல் 2007 ம் ஆண்டு சேவையில் சோ்க்கப்பட்டுள்ளது. 11,000 டன்கள் எடை கொண்ட இந்தக் கப்பல். 25,000 டன்கள் பாரம் சுமந்து செல்லக் கூடியது. காற்றின் அளவைத் தாங்கும் திறன் 12ஐ கொண்டது. இது 222 மீட்டர் நீளத்தையும், 25.2 மீட்டர் அகலத்தையும் கொண்டது. யுவான் வாங் 5 சீன அரசாங்கத்திற்கு சொந்தமான ஷாங்காயிலுள்ள ஜியாங்னன் (Jiangnan Shipyard,Shanghai) கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இந்தக் கப்பலின் மூலம் இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சி மற்றும் தரவுகளை சேகரிப்பதே தனது நோக்கம் என்று சீனா கூறி வருகிறது.
இந்தியாவின் ஆட்சேபனைக்கு சீனாவும் எதிா்வினையாற்றியுள்ளது. "சம்பந்தப்பட்ட தரப்பினர்" தனது சட்டபூர்வமான கடல்சார் அக்கறையிலும், நடவடிக்கைகளிலிலும் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இத்தகைய செயற்பாட்டையே தான் எதிா்பாா்ப்பதாகவும் சீனா கூறியுள்ளது.
சீனாவின் இலக்கு தென்னிந்தியாவா?
சீனக் கப்பலின் வருகை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என இந்தியாவின் தென்பகுதியை உளவு பாா்க்கும் நோக்கில் இருப்பதாகவும், தென்னிந்தியாவின் கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை இலக்கு வைத்து அதன் உளவு வேலையை பாா்க்க திட்டமிட்டிருப்பதாகவும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஓா் அறிக்கையில் அவா் தனது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டுள்ளாா். தென்னிந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சீனா இலக்கு வைத்திருப்பதாகவும் அவா் சாடியுள்ளாா்.
“சீன உளவுக்கப்பல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். 750 கி.மீக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு. அதாவது கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் யுவான் வாங் கப்பல் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும். அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் எத்தகைய தொடர்பு கொண்டவை என்பதை அறிந்தவர்களால், சீன கப்பலின் இலங்கை வருகை தென்னிந்தியாவுக்கு எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இதேவேளை சீன உளவுக் கப்பலை இலங்கைக்குள் அனுமதித்தால் இந்திய உதவிகள் கிடைக்காது போகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினா் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாா். இது தொடா்பாக அறிக்கை ஒன்றையும் அவா் வெளியிட்டுள்ளாா்.
நெருக்கடியான சந்தா்ப்பத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி செய்து வருகின்ற நிலையில், இந்த உதவிகள் கேள்விக்குறியாகுமா? என்று ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியிருக்கிறாா்.
இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏனெனில் இந்தியா சீனாவுடன் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்ற சூழ்நிலையில் இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை மிகவும் உண்ணிப்பாக கவனத்து வருகின்றது. இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கைக்கு கிடைப்பது தடைப்படுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாா்.
சீனக் கப்பல் எங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களையோ, மருந்து பொருட்களையோ கொண்டு வருமாக இருந்தால் அதில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட போவதில்லை. மாறாக உளவு பார்க்கும் விடயத்திற்காக இலங்கை வருவது பலருக்கும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் நிதானமாக கையாளாவிட்டால் பல்வேறு சிக்கல்களுக்கு எதிர்காலத்தில் நாம் முகங்கொடுக்க வேண்டி வரும். ஆகையால் இதனை சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளாா்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இத்தகைய செயற்பாடுகளால் இராணுவ மற்றும் மூலோபாயத் தாக்கங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இந்திய பாதுகாப்பு கட்டமைப்பிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவிடம் உதவி பெற்றுக் கொண்டு இந்தியாவை உளவு பார்க்கும் சீன கப்பல்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி கொடுத்திருப்பது ஒரு நம்பிக்கை மோசடியான செயலாகும் என்று தென்னிந்திய ஊடகங்களின் கருத்தாக இருக்கிறது..
ஆராய்ச்சி என்ற பெயரில் சீனா உளவு பார்க்கிறதா?
இந்தியப் பெருங்கடலில் சீன கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் ஊடுருவல் அண்மைக்காலமாக கணிசமாக அளவு அதிகரித்திருப்பதாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலளித்துள்ளது.
கடல் கடத்தல்காரர்களை மற்றும் கடல் சாா்ந்த குற்றச்செயல்களை சமாளிக்கவே தனது போர்க்கப்பல்களின் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாக சீனா கூறுகிறது.
ஆராய்ச்சி என்ற பெயரில், பசிபிக் பெருங்கடல் முதல் இந்தியப் பெருங்கடல் வரை சீனா உளவு பார்ப்பதாகவும், தனது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இந்தியப் பெருங்கடலில் வழி தேடுவதாகவும். இது தவிர, இந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களை சீனா கண்காணித்து வருவதாகவும் சீனா மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
உலகில் கடல்சாா் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக முத்துக்களின் சரம் என்ற திட்டத்தையே சீனா செயற்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் அடிப்படையிலேயே பாகிஸ்தான் குவாதா் துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவை சீன முதலீட்டால் நிா்மாணிக்கப்பட்டன. இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மையமாக வைத்து எங்கள் கடல் பிராந்தியத்தில் சீனா நடாத்தும் புவிசாா் அரசியல் காய் நகா்த்தல்களுக்கு இனி இலங்கையும் பலியாக வேண்டி வரும், பொறுப்பு சொல்ல வேண்டி வரும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டுதான் யுவான் வாங் 5 கப்பல் விவகாரம்.

0 Comments