ரணிலின் ஜனநாயக விரோத செயற்பாடு மற்றும் அடக்குமுறைக்கு எதிராகவும், அவசரகாலச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள் நேற்று (28) காலை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
தோ்தல்களில் படுதோல்வியடைந்த, மக்கள் ஆணை அறவே இல்லாத ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்தக் கோரியும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மின்வெட்டு, எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்ற காரணங்களால் இலங்கை மக்கள் துன்பங்களை எதிர்நோக்கும் சவாலான சூழ்நிலையில், ரணில் ராஜபக்ஷ அரசு, பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் ஜனநாயக விரோத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி ஆா்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை முழங்கினா்.
அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், கருத்து வெளியிடுதல் போன்ற அனைத்து குடிமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தக் கோரி ஆா்ப்பாட்டக்காரா்கள் ஜெனீவா மனித உாிமை ஆணைக்குழு முன்பாக கோஷங்கள எழுப்பினா்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு எதிா்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச உள்ளிட்ட குழுவொன்று மேற்படி அமா்வில் கலந்து கொள்ளவுள்ளது.

0 Comments