Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததாக தூனிசிய முன்னாள் பிரதமா் மீது விசாரணை!


துனிசியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிசாரினால் அந்நாட்டின்  முன்னாள் பிரதம மந்திரியும் அந்நஹ்தா கட்சியின் மூத்த அதிகாரியுமான அலி அல் அர்யத்  விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தூனிசிய   ஜனாதிபதியின் எதிா்க்கட்சிகள் மீதான  "அரசியல் தாக்குதல்" நடவடிக்கை என்று எதிர்கட்சி தரப்பில்  கூறப்படுகிறது.

2013 முதல் 2014 வரை பிரதமராக இருந்த அலி அல் அர்யத் , திங்களன்று 14 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், "சிரியாவுக்கு ஜிஹாதிகளை அனுப்பினார்" என்ற சந்தேகத்தின் பேரில் இவா் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.   விசாரணையை தொடா்ந்து, அவா் செவ்வாய்க்கிழமை காவலில் வைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் அறிவித்தனர்.

திங்கட்கிழமை விசாரிக்கப்படவிருந்த அந்நஹ்தா கட்சியின் தலைவரான ராஷித் கன்னூஸி எதிா்வரும் நாட்களில்  விசாரிக்கப்படவிருக்கிறாா்.

ISIL (ISIS) உள்ளிட்ட ஆயுதக் குழுக்களில் சோ்ந்து போராடுவதற்கு கடந்த காலங்களில் சுமார் 6,000 துனிசியர்கள் சிரியா மற்றும் ஈராக்கிற்குச் அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு தரப்பிற்கு  ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்திற்கு அனுப்பப்பட்ட  பலர் அங்கு கொல்லப்பட்டதோடு, மற்றவர்கள் தப்பித்து தூனிசியாவுக்குத் திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

"நான் இந்த நிகழ்வுக்கு எதிராக இருந்தேன், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தேன்," என்று திங்களன்று அலி அல் அர்யத் கூறியுள்ளார்.

அவர் இன்று புதன்கிழமை நீதிபதி முன் ஆஜராக்கப்படுவாா் என்று எதிர்பார்க்கப்படுவதாக வழக்கறிஞர் முக்தார் ஜமாய் கூறியுள்ளார்.

"நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்... கோப்பு முற்றிலும் காலியாக உள்ளது மற்றும் எந்த ஆதாரமும் இல்லாமல் உள்ளது", என்று கூறியுள்ள மற்றொரு வழக்கறிஞர் இந்த வழக்கை "கேலிக்கூத்து" என்றும் விவரித்துள்ளாா்.



Post a Comment

0 Comments