Ticker

6/recent/ticker-posts

🔴👉 இலங்கை என்ற நிழல் ராஜ்யம்: கதிர்காமர் படுகொலை ? - பலிகடாவாக்கப்பட்ட ஒரு கூலித் தொழிலாளியின் கதை!


 🔴👉 இலங்கை என்ற நிழல் ராஜ்யம்:

கதிர்காமர் படுகொலை ? -
பலிகடாவாக்கப்பட்ட ஒரு கூலித் தொழிலாளியின் கதை!

இலங்கை — இது வெறும் தீவல்ல; மர்மங்களின் தேசம். ‘டீப் ஸ்டேட்’ (Deep State) எனப்படும் நிழல் 'அரசியல் தாதா'க்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த மண்ணில், அதிகாரத்தின் வெறியில் அரங்கேறும் அராஜகங்களுக்கோ, குற்றங்களுக்கு ஒருபோதும் விடை கிடைப்பதில்லை.

இங்கே அரசியல் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும், மனித உரிமை மீறல்களும் வெறும் செய்திகளாகவே வந்து போயிருக்கின்றன.

ஆனால், இந்த அராஜகங்களுக்குப் பின்னால் மறைந்து இருப்பவர்கள் யார்? விடை தேடினால் ஒரு சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு கொலைக்கான காரணத்தையோ, கொலையாளியையோ கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் - நிச்சயமாக நம்புங்கள், அதற்குப் பின்னால் இந்த நாட்டின் "அரசியல் அதிகாரம்" மறைந்து இருக்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட இந்நாட்டில் நிகழ்ந்த கண்டுபிடிக்கப்படாத, தண்டிக்கப்படாத ஒவ்வொரு படுகொலைகளின் பின்னாலும் ஒரு 'சதிக்கோட்பாடு' (Conspiracy) ஒளிந்திருக்கிறது.

இந்த சதிக்கோட்பாடுகளால் உருவாக்கப்படும் குற்றங்கள், எந்த சட்ட வரம்பிற்குள்ளும் ஒரு போதும் சிக்குவதில்லை.
இந்த அராஜகங்களை புரியும் அதிகார வர்க்கம் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு விசித்திரமான வழியைக் கையாள்கிறது. அதுதான் "விசாரணைக் குழுக்கள்" அமைப்பது.

விசாரணைக் குழுக்களால் காலம் இழுத்தடிக்கப்படும் போது, கொல்லப்பட்டது யார் என்பதும், இடம்பெற்ற குற்றங்களும் மக்களுக்கு மறந்து போய் விடுகின்றன.

இறுதியில், உண்மைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தூசி படிந்த கோப்புகளுக்குள் நிரந்தரமாக உறங்கச் சென்றுவிடுகின்றன..

அப்படி ஒரு மர்மமான படுகொலையும், அதில் அதிகாரத்தால் நசுக்கப்பட்ட ஓர் அப்பாவியின் கதையும்தான் இது...

🔸அந்த நள்ளிரவுத் துப்பாக்கிச் சூடு!

2005 ஆகஸ்ட் 12, இரவு 11:00 மணி. கொழும்பு 7, லொண்டன் பிளேஸ். இலங்கையின் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தனது வீட்டு நீச்சல் தடாகத்தில் குளித்துவிட்டு வெளியே வருகிறார். அடுத்த ஐந்தாவது நிமிடம், ஒரு 'ஸ்னைப்பர்' (Sniper) குண்டு அவரது இதயத்தைத் துளைக்கிறது.

தெற்காசியாவே உற்றுநோக்கிய ஒரு பலம்வாய்ந்த தலைவர், 50 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு வீட்டின் ஜன்னல் வழியாகச் சுடப்பட்டார்.
அடுத்த நாள் அதிகாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
"இது எல்.டி.டி.ஈ (LTTE) வேலை தான்" என்று பொலிஸ் தரப்பு உடனடியாக முத்திரை குத்தியது.

லக்ஷ்மன் கதிர்காமர் இறக்கும் போது தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் பேசப்பட்ட ஓர் அமைச்சராக இருந்தார். இலங்கையில் அமைதியைக் கொண்டுவருவதற்கான உறுதியான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

பலத்த பாதுகாப்பு உள்ள ஒரு அரசியல் தலைவர், பக்கத்து வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டது பலரை சந்தேகத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியது.

🔸மரக்கிளையை வெட்டியதற்காக 14 ஆண்டு சிறை!

இந்த வழக்கில் ஒரு மர்மம் இருந்தது. துப்பாக்கிதாரி பதுங்கியிருந்த வீடு ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் நெருங்கிய உறவான தளையசிங்கம் என்பவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்பட்டது.
ஆனால், காவல்துறை கதிர்காமர் கொலை தொடர்பாக அந்த வீட்டு உரிமையாளரை விசாரிக்கவே இல்லை. மாறாக, அவர்கள் கையில் சிக்கியது ஒரு பலிகடா, அவர்தான் முத்தையா சகாதேவன்.

சகாதேவன் ஒரு சாதாரண தினசரி கூலித் தொழிலாளி. அவர் செய்த "குற்றம்" என்ன தெரியுமா? கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால், அந்த வீட்டின் உரிமையாளர் சொன்னார் என்பதற்காக, பால்கனியை மறைத்துக் கொண்டிருந்த மரக்கிளைகளை வெட்டியதுதான்!

🔸சிதைக்கப்பட்ட பற்களும்... புரியாத வாக்குமூலமும்!

கைது செய்யப்பட்ட சகாதேவனின் முகத்தில் விழுந்த காவல்துறையின் சப்பாத்துக் கால் உதை, அவரது நான்கு பற்களை சிதைத்தது. சிங்களமோ, தமிழோ எழுதப் படிக்கத் தெரியாத அந்த ஏழை மனிதனிடம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு 'ஒப்புதல் வாக்குமூலம்' பெறப்பட்டது. அவர் இட்ட கையெழுத்து, அவரது மரண சாசனமானது.

பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மானுடன் இணைந்து கதிர்காமரைக் கொல்ல சதி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. புலிகளை நேரில் கூட பார்த்திராத சகாதேவன், தான் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறையில் வாடினார்.

"தண்ணீர் தாழ்ந்த இடத்தில் ஊடாக தான் பாயும்" என்பார்களே, அதற்கு இணங்க, காவல்துறையோடு தொடர்பு கொண்டவராக சொல்லப்படும் செல்வாக்கு மிக்க வீட்டு உரிமையாளர் தளையசிங்கம் தப்பினார். கூலித் தொழிலாளியான சகாதேவன் 2019 வரை சிறையில் தள்ளப்பட்டார்.

சுமார் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த சகாதேவன் 2019ம் ஆண்டு ஜுன் மாதம் 22ம் திகதி சிறையிலேயே நோயாளியாகி உயிரிழந்தார்.

🔸மறைக்கப்பட்ட அரசியல் பின்னணி என்ன?

இலங்கையில் சிங்கள மக்களின் ஆதரவு பெற்ற ஒரு அமைச்சராக கதிர்காமர் இருந்தார். சர்வதேச அரங்கில் நாட்டின் நன்மதிப்பை காக்கின்ற ஒருவராக சிங்கள மக்களால் அவர் போற்றப்பட்டார். அவருக்கு சந்திரிக்கா அரசாங்கத்தில் பிரதமர் பதவி வழங்க இருப்பதாக ஒரு கதை பரவியது. 2003 காலப்பகுதியில் ஜே.வி.பி கட்சி (JVP) கதிர்காமரை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாக செய்திகள் வெளிவந்தன.

இது தெற்கின் அதிகார மையங்களில் இருந்த, பிரதமராக வேண்டும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தான் கதிர்காமரின் படுகொலையும் இடம்பெற்றது.
கதிர்காமரின் மரணம் புலிகளுக்கு லாபமோ இல்லையோ, அவர் பிரதமராவதைத் தடுக்க நினைத்தவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

கதிர்காமரின் கொலைக்கு பின்னால் இருந்த உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளியுலகிற்கு வரவேயில்லை. சகாதேவன் என்ற ஒரு அப்பாவியான கூலித் தொழிலாளி சிறைக் கூண்டுக்குள்ளே செத்துப் போனான்.

இந்த நிழல் ராஜ்யத்தின் அராஜகங்களுக்கான சாபம் இந்த தேசத்தை எப்போதும் துரத்திக்கொண்டே இருக்கும்.

▪️அஸீஸ் நிஸாருத்தீன்
01.01.2026
6.00pm

Post a Comment

0 Comments