Ticker

6/recent/ticker-posts

🟥ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.

 


🟥ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.

எக்னெலிகொட கடத்தப்பட்டது 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் திகதி.

ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக நீதிக்காகத் தெருவில் நின்று போராடும் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா பிரியாங்கனி எக்னெலிகொட தனது வலியையும், ஏமாற்றத்தையும் முகப்புத்தக பதிவாக இட்டுள்ளார்.

அதனைப் படிக்கும்போது கடந்த 76 வருடங்களாக இருந்த இலங்கையில் ஊழல்கள், ஊத்தைகள் நிறைந்த ஆட்சி மாறிய போதும், அதன் காட்சிகள் இன்னும் மாறவில்லை என்ற கசப்பான ஒரு செய்தியை அது எனக்கு உணர்த்தியது.

சந்தியா எக்னெலிகொடவின் முகப்புத்தக பதிவைப் பார்க்கும் போது, தற்போதைய System Change 'மாற்றத்திற்கான' அரசாங்கத்தின் மீது இந்நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கை ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது என்பதை புரியக் கூடியதாக இருக்கிறது.
அதிர்ச்சியூட்டும் அந்தத் தகவல் என்ன என்பதை எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட Sandya Priyangani Ekneligoda விபரித்துள்ளார்.

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்ட வழக்கில் 9-வது எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்ட ரதீஷ் பீரிஸ் என்பவருக்கு, இந்த ஜனவரி மாதத்தில் அனுரகுமாரவின் என்பிபி அரசாங்கத்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொழும்பு நிரந்தர தீர்ப்பாய மேல் நீதிமன்றத்தில் (Trial-at-Bar) நடைபெற்று வரும் HC(TAB)725/2019 என்ற வழக்கின் 9-வது பிரதிவாதி தான் இந்த தெல்கே எரந்த ரதீஷ் பீரிஸ் என்ற இராணுவ அதிகாரி.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், இராணுவ அதிகாரி தெல்கே எரந்த ரதீஷ் பீரிஸ் என்பவர், 2010 ஆம் ஆண்டு பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட போது கிரிதலே இராணுவ முகாமில் பணியாற்றியுள்ளார்.

அந்த முகாமின் புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த லெப்டினன்ட் கேணல் ஷம்மி குமாரரத்னவின் (இந்த வழக்கின் முதல் பிரதிவாதி) கீழ் பணியாற்றிய ஒரு மேஜர் ஆவார் இந்த எரந்த ரதீஷ்.
எந்தவொரு நபராவது ஒரு குற்ற வழக்கில் பிரதிவாதியாக இருக்கும்போது, அவருக்கு எப்படி பதவி உயர்வு வழங்க முடியும்?
அதுவும் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்ட பிரபலமான வழக்கில் பிரதிவாதியாக இருக்கும் ஒருவருக்கு பதவி உயர்வை வழங்க அனுரகுமார அரசுக்கு எப்படி தைரியம் வந்தது?

எக்னெலிகொடவை பின்தொடர்ந்து வேவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு ஒரு வழக்கில் சந்தேக நபராக உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு இந்த பதவி உயர்வு கௌரவம் வழங்கப்படுவது எவ்வகையில் நியாயம்? என்பதை நீதியை நேசிக்கும் இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார விளக்கம் கொடுக்காமல் விலகி நிற்க முடியாது.

கடந்த காலங்களில், காணாமலாக்கப்பட்ட எக்னெலிகொடவின் நீதிக்காகக் குரல் கொடுத்தவர்களில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முக்கியமானவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று அவர் ஆட்சியில் இருக்கும்போதே, அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது 'சிஸ்டம் சேஞ்ச்' (System Change) என்று இந்நாட்டு மக்கள் நம்பிய மாற்றத்திற்கு எதிரானது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறதா?

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் மௌனிக்கப்பட்டதாகக் கருதப்படும் கருப்பு மாதமாக வர்ணிக்கப்படும் இந்த ஜனவரி மாதத்திலேயே, குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் காயத்தின் வலிகளோடு அதிகாரத்தை வைத்து பித்துப் பிடித்து விளையாடும் செயலாகும்.

சந்தியா எக்னெலிகொடவின் 16 வருடப் போராட்டத்தை வெறும் காட்டுக்கத்தலாகவும், நீதித்துறையின் செயற்பாடுகளையும் வெறும் காகித ஆவணமாகவும் மட்டும் இந்த அரசு கருதுகிறதா?

சந்தியா எக்னெலிகொட தனது பதிவில் குறிப்பிட்டது போல, அவர் இதுவரை 4 ஜனாதிகளிடம் நீதி கோரி போராடியுள்ளார். அந்த வரிசையில் அவர் நீதி கோரும் 5-வது ஜனாதிபதி அனுரகுமார ஆவார்.
"அதிகாரத்தில் இருக்கும் அநியாயக் காரர்களை மாற்றினால், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு விடிவு கிடைக்கும்” என்ற நம்பிக்கை சிதைந்து போயுள்ளது, என்ற கசப்பான உண்மையை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த அரசாங்கம் உண்மையில் நீதியின் பக்கம் நிற்கிறது என்றால், உடனடியாக இந்தத் தகுதியற்ற பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் கௌரவிக்கப்படுவதை நீதி நியாயத்தை நேசிக்கும் எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த அரசாங்கத்திற்கு சொல்லிவைக்க வேண்டும்.
நீதிக்கான போராட்டத்தில் நாம் சந்தியாவின் பக்கம் என்றும் நிற்போம்!

▪️ அஸீஸ் நிஸாருத்தீன்
12.01.2026
8.00am

Post a Comment

0 Comments