Ticker

6/recent/ticker-posts

கிரீன்லாந்தை விழுங்கத் துடிக்கும் ட்ரம்ப்!

 


🔺#கதை_இதுதான்

கிரீன்லாந்து, பனி படா்ந்த அந்த பூமி அமெரிக்காவின் புவியரசியல் நிகழ்ச்சி நிரலால் பற்ற ஆரம்பித்திருக்கிறது!
ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழத்தில், உறைந்து போயிருக்கும் பனிப்பாறைகளுக்குக் கீழே ஒரு பெரும் தணல் தகித்துக் கொண்டிருக்கிறது.

அது இயற்கையாய் வெடித்து வெளிவரும் எரிமலையின் வெப்பமல்ல; மாறாக, உலகப் பேராதிக்க சக்தியான அமெரிக்கா, தனது ஆதிக்க வெறி என்ற எண்ணெய் ஊற்றி அந்த பனி பூத்த பூமியை இன்று பற்ற வைத்துள்ளது.

கிரீன்லாந்து என்ற பனி போர்த்திய தேசம், இன்று புவி அரசியலில் பேசப்படுகின்ற புதிய புள்ளியாக மாறி இருக்கிறது. "ஜனநாயகம்" என்ற முகமூடியணிந்து கொண்டு, பிற நாடுகளின் இறையாண்மையைக் குலைப்பதில் அமெரிக்கா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை "விலைக்கு வாங்க" விருப்பம் தெரிவித்தபோது, அது ஒரு நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்காவின் மனிதநேயமற்ற, காட்டுமிராண்டித் தனமான காலனித்துவ மனநிலையாகும்.

கிரீன்லாந்து இன்று உலகின் பார்வையில் ஒரு "தங்கச் சுரங்கம்". புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள் உருக உருக, அதன் அடியில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பற்ற கனிம வளங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

கிரீன்லாந்தின் பனிப்பாறைகளுக்குக் கீழ் உறங்கிக் கொண்டிருப்பது சாதாரண கனிம வளங்களோ, வெறும் உலோகங்களோ அல்ல,
அந்நாட்டில் புதைந்து கிடப்பது. வருங்கால உலகப் பொருளாதாரத்தின் அச்சாணிகளாக கருதப்படக் கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு பயன்படக் கூடிய நியோடைமியம் (Neodymium) , பிரசோடைமியம் (Praseodymium), டிஸ்ப்ரோசியம் (Dysprosium) போன்ற ஆற்றல் மிக்க கனிம வளங்களாகும்.

இந்த அரிய வகை கனிமங்கள் இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகின்றன.
ஸ்மார்ட்போன்கள் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்திற்கும் இவை அவசியமானவையாகும். மின்சார வாகனங்களின் மோட்டார்கள் மற்றும் காற்றாலைகளுக்கான காந்தங்களைத் தயாரிக்க இக்கனிமங்கள் இன்றி அமையாதவையாக இருக்கின்றன.

இவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், சீனாவுக்கு நிகராக ஒரு உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்க அமெரிக்கா துடியாய்த் துடிக்கிறது. இது தவிர, அங்குள்ள தங்கம், இரும்பு மற்றும் வைரம் போன்ற பாரம்பரிய வளங்கள் ஒருபுறமிருக்க, யுரேனியம் (Uranium) போன்ற அணுசக்திக்குத் தேவையான கனிமங்கள் காரணமாக கிரீன்லாந்து இன்று ஒரு பூகோளப் போர்முனையாக மாறியுள்ளது.

மற்றைய நாடுகளில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை கொள்ளையிடுவதில் அமெரிக்காவுக்குள்ள அதிக ஆர்வம் வெறுமனே வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல; இக்கனிமங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மற்ற நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தன் கைக்குள் வைப்பதே அதன் பிரதான நோக்கமாகும்.

சுருக்கமாகச் சொன்னால், கிரீன்லாந்தின் இயற்கைச் செல்வம் என்பது வல்லரசுகளுக்குப் பொருளாதாரப் புதையலாகவும், அந்த மண்ணின் மைந்தர்களுக்குத் தங்களது இறையாண்மையைக் காப்பதற்கான சவாலாகவும் இன்று மாறியுள்ளது.

அஸீஸ் நிஸாருத்தீன்
19.01.2026
10.30pm

Post a Comment

0 Comments