Ticker

6/recent/ticker-posts

பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 16 வருடங்கள்!

 

❎ காலம் ஆறாத பல காயங்களோடு கரைந்து கொண்டிருக்கிறது.

இலங்கைத் தீவு இதற்கான எண்ணற்ற சாட்சிகளைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. மனிதர்கள் காணாமல் ஆக்கப்படுதல், கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுதல் மற்றும் திட்டமிட்ட இனக்கலவரங்கள் என மனித உரிமை மீறல்களின் வடுக்கள் இந்த தேசத்தின் மேனியில் ஆழமாகப் பதிந்துள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அவமானகரமான வடுக்கள் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் இலாபத்திற்காகக் கிண்டி, கிளறி விடப்படுகின்றன.

வடுக்களையும், ஆறாத காயங்களையும் மீண்டும் ரத்தக் கறைகளாக்கி, அந்தக் கதைகளின் மூலம் பொதுமக்களை மயக்கி, வெற்றிகரமாக 'வாக்கு வேட்டை' நடத்துவதே இலங்கை ஜனநாயகக் குடியரசின் மகத்துவம் பொருந்திய தேர்தல் வரலாறாக மாறிவிட்டது.
இந்த வடுக்கள் காயங்களாக மாற்றப்பட்டதற்குப் பல சான்றுகள் நம்மிடம் உள்ளன. இதில் பிரதானமானது, ஊடகங்கள் மீதான அடக்குமுறையும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரமுமாகும்.


பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 24 அன்று காணாமல் ஆக்கப்பட்டார். அவர் காணாமலாக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. ஒரு காத்திரமான ஊடகவியலாளனாக, கூர்மையான கேலிச்சித்திரக் கலைஞனாகச் செயலாற்றிய அவருக்கு என்ன நடந்தது? எப்படி கொடுமைப் படுத்தப்பட்டார்? எந்தப் புதைகுழியில் அவரது உடல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது? - இந்தக் கேள்விகளுக்கு இன்றும் பதில் இல்லை.

இந்த அநீதிகளுக்கு முன்னால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அதிகார வர்க்கங்களின் பதிலை "மௌனம்" என்ற ஒற்றைச் சொல்லுக்குள்ளேயே அடக்கிவிடலாம். இந்த அராஜகத்தின் நிழல் 2026-ஆம் ஆண்டிலும் தொடர்வதுதான் காலத்தின் பெருங்கொடுமை.
இன்று பிரகீத் எக்னெலிகொட என்பது வெறும் பெயரல்லாமல், ஊடகவியலாளர்கள் மீதான அரச அராஜகத்தின் குறியீடாக இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் ஊழல்களையும், அநீதிகளையும் எதிர்த்து எழுதியதற்காக, ஏனைய பல ஊடகவியலாளர்களைப் போலவே அவரும் தண்டிக்கப்பட்டார்.

பதினாறு ஆண்டுகள் என்பது மிகப்பெரிய கால இடைவெளியாகும். நீதியை வெகுதூரத்தில் தொலைத்துவிட்டு, பிரகீத்தின் குடும்பம் இன்றும் ஒரு நெருப்பாற்றில் நீந்திக் கொண்டிருக்கிறது.
தன் கணவனுக்கு நீதி கேட்டு சந்தியா எக்னெலிகொட வீதிகளில் முன்னெடுக்கும் போராட்டம் இன்னும் தணியவில்லை.
கண்ணீரும் தார்மீகக் கோபமும் கலந்த அந்தச் சகோதரியின் ஓயாத போராட்டம், இலங்கையின் நீதித்துறையின் நம்பகத்தன்மையை நாளுக்கு நாள் கேள்விக்குட்படுத்தி வருகிறது.

"Justice delayed is justice denied"

"தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்"

Post a Comment

0 Comments