மலேசியாவில்
பெய்து வரும் கடும் மழை காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவு கடும்
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் பலியாகி
உள்ளனர்.
மேலும்
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கெலாந்தன் உட்பட குறைந்தது 8 மாநிலங்களில்
இருந்து 160 000 இற்கும் அதிகமானவர்கள் இன்று சனிக்கிழமை இடம்
பெயர்ந்திருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இத்திடீர் அனர்த்தத்தையடுத்து சனிக்கிழமை மலேசியப் பிரதமர் நஜீப் ரஷாக்
தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்து விட்டு பாதிக்கப் பட்ட பகுதிகளைப்
பார்வையிடச் சென்றுள்ளார். மேலும் வெள்ள நிவாரண நிதிக்காக சுமார் 500
மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப் படும் எனவும் நஜீப் அறிவித்துள்ளார். வழமையாக
மலேசியாவின் வடகிழக்குக் குடா நாடு மொன்சூன் எனும் பருவ மழை பெய்யும் போது
ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப் படும் பகுதியாகும். ஆனால்
இவ்வருடம் பருவ மழை கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது அதிகம் எனவும்
இதனால் வெள்ளப் பெருக்கும் மிகையாக உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மலேசியப் பிரதமர் அந்நாட்டிலுள்ள தேசிய பாதுகாப்புச் சபை,
தேசிய அனர்த்த முகாமை அமைப்பு, மீட்புக் குழுக்கள், மாநில அரசு மற்றும்
உள்ளூர் அவசர நிலை உதவியாளர்கள் ஆகியோரைக் கூட்டி நிவாரண நடவடிக்கைகள்
குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்திருந்தார். தற்போது வெள்ளத்தால்
பாதிக்கப் பட்ட இடங்களில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவுத்
தட்டுப்பாடுகளால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். கடைகளும் வர்த்தக
நிலையங்களும் மூடப் பட்டுள்ளன. மேலும் ஆயிரக் கணக்கான மக்கள் தற்காலிக
முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

0 Comments