சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே சென்று விசாரணை நடத்த ஏதுவாக
தமிழக காவல்துறையினருக்கு வழங்கியிருந்த அனுமதி அட்டையை புதுபித்துத்தர
விமானநிலை பாதுகாப்பு பிரிவினர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால், இன்று அதிகாலையிலிருந்து வாயில் காவலுக்கு நின்றிருக்கும்
மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் தமிழக போலீசாரை விமான நிலையத்திற்குள்
அனுமதிக்க மறுத்துவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு
வழங்கப்பட்ட சுமார் 100 அனுமதி அட்டைகள் நேற்றுடன் காலாவதியாகிவிட்ட
நிலையில், அந்த அட்டைகளை புதுபித்துதர அதிகாரிகள் மறுத்துள்ளதாக தெரிகிறது.
முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் போதும், நுண்ணறிவு தகவல்களைச்
சேகரிக்கவும் தமிழக போலீசார் விமான நிலையத்திற்குள் சென்றுவருவது பல
ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட நடைமுறை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுங்கத்துறை, குடியுரிமை அதிகாரிகள் குற்றவாளிகளைப் பிடிக்கும் போதும்
காவல்துறையினர் விமான நிலையத்திற்குள் சென்று குற்றவாளிகளை கைது செய்ய
ஏதுவாகவும் அனுமதியட்டை வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவுத்தலைவர் அலுவலகத்தை
தொடர்புகொண்டபோது, உரிய முறையில் விளக்கம் அளிக்க அதிகாரிகள்
மறுத்துவிட்டனர்.
0 Comments