வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படுமாயின் மீள் குடியேற்றத்திற்கான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொது நலவாய அலுவல்கள் அமைச்சர் கியூகோ ஸ்வயரூடனான சந்திப்பின் பின்னர் மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இதனைத் தெரிவித்தார்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் கியூகோ ஸ்வயர் நேற்று அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை சந்தித்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரும் கலந்து கொண்டிருந்தார். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர்மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானிய அமைச்சர் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவருடனான சந்திப்பின் போது பல விடயங்கள் கலந்துரையாடியிருந்தோம். இதன் போது குறிப்பாக வடக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் பேசியிருந்தோம். வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணியினை மீளவும் பெற்று பொதுமக்களிடம் ஒப்படைப்பது தொடர்பிலும் சம்பூரில் இருக்கும் காணியினை பொது மக்களிடம் ஒப்படைப்பது தொடர்பிலும் பேசினோம்.
சுமார் ஆயிரத்து நூறு ஏக்கர்களுக்கு மேலான பொதுமக்களின் நிலங்களை அரசாங்கம் மீளவும் அவர்களுக்கு ஒப்படைக்குமாயின் மீள் குடியேற்றத்தினை செய்து பொதுமக்களை பாதுகாக்க வசதியாக இருக்கும். அதேபோல் அதியுயர் பாதுகாப்பு வலயமென குறிப்பிட்டு பொதுமக்களின் காணிகளில் உள்ள வீடுகளும் ஆலயங்களும் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றினை மீள் புனரமைத்து மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. அத்தோடு இந்தியாவில் இருக்கும் எமது மக்கள் மீண்டும் நாடு திரும்ப ஆவலுடன் இருப்பார்களாயின் அவர்களை வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ஆனாலும் வடக்கில் அவர்கள் குடியமர்த்தப்பட வேண்டுமாயின் அங்கு காணிகள் அவசியமானது.வடக்கில் உள்ள இராணுவத்தை தேவைகளுக்கேற்ப பாதுகாப்பிற்காக வைத்திருப்பார்கள் ஆயின் அதனால் எவ்விதப் பிரச்சினைகளும் ஏற்படப் போவதில்லை. அதேபோல் இராணுவ முகாம்கள் இருப்பது பெரிய விடயமல்ல. ஆனால் பொது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதே பிரச்சினையாக உள்ளது. எனவே அவற்றை விடுவிக்க வேண்டும்.
புதிய தேசிய அரசாங்கத்தில் இவ் விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுகள் நடத்தி இது குறித்து கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம். ஆகவே இன்றைய சந்திப்பின் போது இவ் விடயங்கள் தொடர்பில் பேசியதுடன் எமக்கு உதவ பிரித்தானியா தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனினும் வடக்கில் பொது மக்களை மீள் குடியேற்ற உதவுவதற்கு பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை தயாராக இருக்கின்ற நிலையில் காணிகள் இன்னமும் பொது மக்களிடம் கையளிக்கப்படாமையே சிக்கலையேற்படுத்தியுள்ளது.
எனவே முதலில் தற்போது இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கின்ற பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமாயின் வடக்கில் மீள் குடியேற்றங்களை செய்து கொடுக்க சகல விதத்திலும் உதவத்தயார் என பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

0 Comments