விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் தலைவரும், ஆயுத விநியோகஸ்தராக செயற்பட்டவரும், பிரபாகரனின் மறைவிற்குப் பின்னா் புலிகள் இயக்கத்தின் தலைவராக செயற்பட்டவருமான கே பி என்ற குமரன் பத்மநாதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆரத்தழுவுவது போன்ற புகைப்படம் தொடர்பில் அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது எதிரணியின் மிகவும் மோசமான பிரசாரம் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கே பி எனும் குமரன் பத்மநாதன், தற்போது அரசாங்கத்தின் அரவணைப்பில் உள்ளார். இவரே வடக்கில் ஜனாதிபதியின் தோ்தல் பிரசார வேலைகளை செயற்படுத்துவதாக அறிய வருகிறது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரை அரசாங்கம் உரிய இடத்தில் பயன்படுத்தும் என்றும் சுசில் பிரேமஜயந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சிங்கள திரைப்பட முன்னோடியான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவேற்கும் படத்தில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கே பியின் படம் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது பாரிய பிரசுர உரிமைமீறல் சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


0 Comments