Ticker

6/recent/ticker-posts

மலையக மக்களின் புதிய மாற்றத்திற்கு புத்துயிர் அளிப்போம்: அமைச்சர் பழனி திகாம்பரம்

மலையக மக்களின் புதிய மாற்றத்திற்கான பாதைக்கு புத்துயிர் அளிப்போம் என்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற அமைச்சர் மலையகத்தின் முக்கிய பிரச்சினையான மலையக வீடமைப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் முன்னர் மல்வத்தை மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து நல்லாசி பெற்றார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், தனிவீடு, கல்வி மற்றும் சுகாதாரம் என்பன தற்போது மலையகத்தில் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை தோட்ட மக்களுக்காக வழங்கியிருந்தார். ஆனால் 2007ஆம் ஆண்டின் பின்னர் அது நீக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய அரசாங்கம் தோட்ட மக்களின் முக்கிய பிரச்சினையான தனிவீட்டு பிரச்சினையை தீர்க்க முன்வந்துள்ளது. அந்தவகையில் தோட்ட மக்களுக்கென்றே உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு எனக்கு தரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கல்வி இராஜாங்க அமைச்சு அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே நாம் இருவரும் அமைச்சர் வேலாயுதம் மற்றும் மனோகணேசன் ஆகியோருடன் இணைந்து மலையக மக்களின் எதிர்ப்பார்ப்பான 7 பேர்ச் காணியிலான தனிவீட்டு கனவை நினைவாக்கும் காலம் மலர்ந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments