பசறை – பண்டாரவளை பிரதான வீதியை மறித்து, பிரதேச மக்கள் நேற்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பசறை – பண்டாரவளை பிரதான வீதியை மறித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
பதுளை – எல்ல தபால் நிலையத்தில் தபால் விநியோகஸ்தராகக் கடமையாற்றும் இளைஞரே தாக்குதலுக்கு இலக்கானதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறினர்.
தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் இளைஞர் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நியூஸ் பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.
தான் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் தம்முடன் இருந்த ஊடகவியலாளருக்கும், குறித்த இளைஞருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் தபால் மாஅதிபரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தமது ஊழியர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், இந்த தாக்குதல் இடம்பெற்ற வேளையில், தபால் விநியோகத்தரிடமிருந்த 32 உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் காணாமல் போயுள்ளதாகவும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்
இதேவேளை, இன்று முற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவினோம்.
தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் இளைஞர் இன்று பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் மற்றுமொருவரும் இன்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments