இங்கு இராணுவமே நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பது போலவும், அரசு பெயரளவில் மாத்திரமே இயங்குவதாகவுமே உள்ளது. இராணுவத்தின் கட்டளையை ஜனாதிபதியும் - பிரதமரும் கேட்கின்றனரா?
அல்லது ஜனாதிபதியினதும் - பிரதமரதும் கட்டளையை இராணுவம் கேட்கின்றதா என்பது புரியவில்லை - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு முழுமையாக விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்து, மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், வயாவிளான் கிழக்குப் பிரதேசத்துக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை சென்றார். அங்கு நின்ற ஒரு தொகுதி மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
"கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், சில வாரங்களில் வயாவிளான் முற்றுமுழுதாக மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
அந்த வாக்குறுதிகளை நம்பி மீள்குடியேற்றம் நடைபெறும் என்று மக்களிடம் நல்ல செய்தியை தெரிவித்தேன்.
ஆனால் தற்பொழுது என்னுடன் சேர்த்து மக்களும் ஏமாற்றப்பட்டு விட்டனர். மீள்குடியேற்றத்திற்கான சாதகமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில் இராணுவம் முட்டுக்கட்டையாக உள்ளது.'' என்று அவர் கூறினார்.
"இவ்வாறான நடவடிக்கை, இந்த நாட்டில் இராணுவத்திற்கு அரசு கட்டுப்பட்டுள்ளதா அல்லது அரசுக்கு இராணுவம் கட்டுப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை பலமாக எழுப்புகின்றது.'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அங்கு நின்ற மக்கள் முதலமைச்சரிடம் தங்களுடைய ஆதங்கங்களை முன்வைத்தனர். "இராணுவத்தினரை நம்பி21 குடும்பங்கள் மாத்திரம் இங்கு எப்படி குடியமர முடியும்?. 1990 ஆம் ஆண்டு நாங்கள் இடம்பெயர்வதற்கு முதல் இருந்தவாறு இராணுவத்தை இருக்கப் பணியுங்கள்.
நாங்கள் தோட்டம் செய்த நிலங்களில் இராணுவத்தினர் இப்போது தோட்டம் செய்கின்றனர். பாதுகாப்புக்கும் தோட்டம் செய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது?'' என்றும் மக்கள் கேள்வியயழுப்பினர்.

0 Comments