ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மருமகனுமான உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேனிய பிரிவினைப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்தார் என்று, உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக, உக்ரேனிய அரசாங்கம் செய்துள்ள முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு விநியோகிக்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டை விலக்கிக் கொள்ள, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, உதயங்க வீரதுங்க தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. புதிய அரசாங்கம் அவரை நாடு திரும்ப உத்தரவிட்ட போதும், அவர் சிறிலங்கா திரும்பவில்லை.
இந்தநிலையிலேயே, அவரது இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இவர் மீதான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக, தற்போது, பாகிஸ்தான் சென்றுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பிய பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, மகிந்த ராஜபக்சவின், தாயாரின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments