சுவிஸ் வங்கியில் சுமார் 60 ஆண்டுகளாக செயலற்று உள்ள கணக்குகள் தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து வங்கியில் 1955ம் ஆண்டிற்கு முன்னர் ஆயிரக்கணக்கான கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன் பின்னர் எந்த செயல்பாட்டிலும் இல்லாமல் இருந்துள்ளது.
அதாவது, சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் அந்த கணக்குகளில் பணம், தங்கம் மற்றும் பிற சொத்துக்களை இருப்பு வைத்தவர்கள், அதன் பின்னர் அந்த கணக்குகள் குறித்து எந்த செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருந்து வந்துள்ளது வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஜேர்மனியின் Welt am Sonntag என்ற பத்திரிகை, தூங்கிக்கொண்டிருக்கும் இந்த கணக்குகளை தீவிரமாக விசாரணை செய்தால், ஹிட்லரின் நாசிச படையினர் கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் பதுக்கிய சொத்துக்களின் விபரம் வெளிவர வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தற்போது செயலற்று உள்ள கணக்குகளை சுவிஸின் புதிய சட்ட விதிகளை பயன்படுத்தி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கணக்குகள் குறித்த விபரங்கள் நடப்பாண்டிற்குள் வெளியிடப்படும்.
சுவிஸ் வங்கியின் விசாரணை குறித்து பேசிய சுவிஸ் வங்கிகள் அமைப்பின்(Swiss Bankers Association (SBA)) செய்தி தொடர்பாளர் ஒருவர், சுவிஸ் வங்கியில் ஆயிரக்கணக்காண கணக்குகள் செயலற்று உள்ளது உண்மை தான் என்றும், அவர்களில் சுவிஸ் மற்றும் வெளிநாட்டினரை சேர்ந்தவர்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செயலற்று உள்ள கணக்குகளுக்கும் ஹிட்லரின் நாசிசவாதிகளின் வங்கி கணக்குகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அது குறித்து மட்டும் இந்த விசாரணையை தொடங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் முடிவில் செயலற்று உள்ள கணக்குகளில் உள்ள சொத்துக்களை உரிமையாக்கி கொள்ள யாரும் முன் வராத பட்சத்தில், அனைத்து சொத்துக்களையும் சுவிஸ் அரசிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments