துபாயில் உள்ள மெரியட் ஹோட்டல் குறித்த செய்திகள் சா்ச்சையை கிளப்பி வருகின்றன.
இதன் உரிமையாளராக இலங்கையரான வர்த்தகர் நந்தன லொக்குவிதான உள்ளார். ஆனால் மெரியட் ஹோட்டல் தொடா்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி செய்திகள் உலாவுகின்றன.
இக்குற்றச்சாட்டுகளை மஹிந்த ராஜபக்ஸ இப்போது வரை முற்றாக நிராகரித்து வருகின்றார். இவ்விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ நிதி குற்ற புலனாய்வு பொலிஸ் பிரிவை மிக கடுமையாக சாடி உள்ளார்.
துபாயில் உருக்கு கம்பனியோ அல்லது ஹோட்டலோ இவருக்கு சொந்தமாக கிடையாது என்று தெரிவித்து உள்ளார். ஆனால் நிதி குற்ற புலனாய்வு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி உள்ளார்கள்.
துபாயில் மஹிந்த ராஜபக்ஷ மிக பெரிய அளவில் முதலீடு செய்து உள்ளார்.
சத்திய கடதாசி மூலமாக நந்தன லொக்குவிதானவை டம்மியாக நியமித்து உள்ளார், மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட நிதி ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுகின்ற சஜின் வாஸ் குணவர்தன மூலமாகவே நந்தன லொக்குவிதான சில வருடங்களுக்கு முன்னர் மஹிந்தவுக்கு அறிமுகமானார். சஜின் வாஸ் குணவர்தனவே வேண்டிய ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தார் என்று வலுவாக சந்தேகிக்கப்படுகின்றது.
நந்தன லொக்குவிதானவின் சொந்த இடம் நாத்தாண்டியா, வர்த்தகத்தில் நஷ்டம் அடைந்து காணாமல் போய் இருந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
புதிய மெரியட் ஹோட்டல் நிலோனா கோபுரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோபுரம்கூட மஹிந்தவுக்கே சொந்தம் என்று சொல்லப்படுகின்றது.
ஹோட்டலில் நட்சத்திர ஆடம்பர அறைகள், சகல வசதிகளுடனும் கூடிய கேட்போர் கூடங்கள், அற்புதமான உணவகங்கள் ஆகியன காணப்படுகின்றன. நகரத்தின் வர்த்தக மையப் பகுதியிலேயே ஹோட்டல் அமையப் பெற்று உள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 10 நிமிடங்களில் இந்த நான்கு நட்சத்திர ஹோட்டலை வந்தடைய முடியும்.
நுட்பமாக திட்டமிடப்பட்ட வகையில் 35 விருந்தினர் அறைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கின்றன. உதரணமாக குளியல் அறைகள் மாபிள்களால் ஆக்கப்பட்டவை.
மேலும் ஹெல்த் கிளப், கூரை மேல் அமைக்கப்பட்டு உள்ள நீச்சல் தடாகம், நீராவிக் குளியல் அறை, விளையாட்டு அறை ஆகிய சூப்பர் வசதிகளை ஹோட்டல் கொண்டு உள்ளது.
இதே நேரம் நிலோனா கோபுரத்தின் ஒரு பகுதியில்தான் உருக்குக் கம்பனியும் அமைக்கப்பட்டு உள்ளது. இது 1998-ம் ஆண்டு முதல் இயங்குகின்றது. 60 பேர் வரை கடமையாற்றுகின்றனர்.
கட்டிட கைத்தொழில் துறைக்கு தேவையான உருக்குகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பதுதான் இக்கம்பனியின் பிரதான வர்த்தக நடவடிக்கை ஆகும்.

0 Comments