Ticker

6/recent/ticker-posts

சிறுவர்கள் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக மரண தண்டனை வழங்க வேண்டும் - அஷ்ஷெய்க் மிப்லால் கோரிக்கை

இலங்கையில் தொடராக இடம் பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலைகளைக் கண்டித்து ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் மிப்லால் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று காலை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தக்கோரி எழுத்துமூல வேண்டுகோள் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அந்த வேண்டுகோளில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் கீழே தரப்படுகிறது.


இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் கொலை மற்றும் கற்பழிப்புச் சம்பவங்களின் அதிகரிப்பை அவதானிக்கும் போது

இலங்கையின் எதிர்காலம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் பட்டுக்கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அண்மைக் காலமாக இடம்பெறும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கொலைகள்
இந்த நாட்டின் சட்டங்களில் உள்ள குறைபாட்டையே எடுத்துக்காட்டுகிறது. சட்டங்களிலுள்ள ஓட்டைகள்
இந்தக் குற்றங்கள் அதிகரிக்க ஏதுவாக அமைந்திருப்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் பாரிய குற்றங்கள் இழைப்பவர்கள்; குறைந்தது மூன்று மாதங்களில் பிணையில் வெளிவர  எமது
குற்றவியல் சட்டம் உதவி செய்கிறது. இந்த நிலை குற்றவாளிகளுக்கு தைரியத்தை வழங்கும் ஒன்றாக இருக்கிறது
என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறோம்.

உலகின் பல நாடுகளில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலைகளுக்கு வழங்கும் கடுமையான தண்டனைகளால்
அந்த நாடுகளில் இத்தகைய பாரிய குற்றங்கள் குறைந்திருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.  ஆனால்
இலங்கையைப் பொறுத்த வரை நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் நிலையே உருவாகியிருக்கிறது.
இலங்கையில், சமூகத்தை பாதிக்கும் குற்றச் செயலொன்று நிகழும் போது, அது தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது.
அந்த சந்தர்ப்பத்தில் மரண தண்டனையைப் பற்றி அதிகம் பேசி அமைதியாகி விடுவதும்
எமக்கு ஒரு வழமையாகிவிட்டது.

நாட்டை உழுக்கும் கொலைகள் நடக்கும் போது சிறைச்சாலைகளிலுள்ள மரண தண்டனை நிறைவேற்றும்
செயலிழந்த தூக்கு மரத்தை புதுப்பிப்பதும், தூக்கு மரத்தை இயக்க ஆள் தேடுவதும் வழமையாகிவிட்ட சூழலில்
மீண்டும் அது பழைய 'கதை'க்கு செல்வதுமாக ஒரு நாடகமே அரங்கேறி வருகிறது.  இன்று கொலை, கற்பழிப்பு
போன்ற பாதக செயல்களை அடியோடு ஒழிக்கும் திட்டம் ஒன்றை மிக அவசரமாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்
என்ற அழுத்தம் அரசாங்கத்தின் மீது பொதுமக்களால் கொடுக்கப்படுவதை உங்களால் மறுக்க முடியாது.

தொடரும் இந்த பாதகச் செயல்களை இந்நாட்டிலிருந்து துடைத்தெறிய மரண தண்டனை ஒன்றே ஒரே வழி என்ற
கருத்தை இன்று இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். எனவே இந்நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு
இத்தகைய கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த நாடு;
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற நாடாக மாறிவரும் நிலையை மாற்ற உடனடி சட்ட மாற்றங்களை கொண்டு வந்து குற்றவாளிகளின் கோட்டையாக மாறிவரும் இந்த தேசத்தை காப்பாற்றுமாறும் எமது கட்சி இலங்கை மக்கள் சார்பாக உங்களை தயவாய் வேண்டுகிறது.


Post a Comment

0 Comments