Ticker

6/recent/ticker-posts

அகதிகள் மீது ஹங்கேரி தாக்குதல் : செர்பியா அரசு கடும் கண்டனம்

செர்பியாவிலிருந்து ஹங்கேரிக்குள் நுழைய முயன்ற அகதிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால்  குழந்தைகள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான அகதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டதற்கு செர்பிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


அகதிகளை ஏற்பதில் சிக்கல் :

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் கொடூர தாக்குதலுக்கு அஞ்சி தினமும் ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் கிரீஸ், மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி என பல நாடுகளைக் கடந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், அகதிகளுக்குப் புகலிடம் அளிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளால் ஒருமித்த கருத்தை எட்டமுடியாததால், அகதிகளைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அகதிகளை ஒரு சில நாடுகள் மட்டுமே ஏற்பது முடியாது :

இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ் கூறுகையில், ”பேரிடர்கள் மற்றும் பிரச்சனைகள் எழும்போது நாங்கள் என்ன உதவியைச் செய்ய முடியுமோ அதைச் செய்யத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அகதிகளை வரைமுறையின்றி ஒரு நாடு ஏற்பது இயலாது. அகதிகள் பிரச்சனையில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணையவேண்டுமே ஒழிய மிகச் சில நாடுகளே முழுமையாக உதவவேண்டும் என்பதை என்னால் ஏற்கமுடியாது”, இவ்வாறு தெரிவித்துள்ளார். 

செர்பிய எல்லையில் அகதிகள் தவிப்பு :

இதைத் தொடர்ந்து, ஹங்கேரியில் நுழையும் அகதிகளைத் தடுக்கும் நோக்குடன் அந்நாட்டு அரசு தனது செர்பிய எல்லையில் சுமார் 175 கிலோ மீட்டர் நீளத்துக்கு வேலி அமைத்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான அகதிகள் செர்பிய எல்லையில் பரிதாபமாகத் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலியை அகற்றி தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அகதிகள், ஹங்கேரி அமைத்துள்ள வேலியையும் உடைக்க முற்பட்டனர். அவர்கள் மீது ஹங்கேரி போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். தண்ணீர் பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. இதனால், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான அகதிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகினர். 

செர்பியா கண்டனம் :

ஹங்கேரி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு செர்பிய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் வூலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செர்பிய அமைச்சர் அலெக்சாண்டர் வூலின் வெளியிட்ட செய்தியில், “ஹங்கேரி அரசின் இந்த நடவடிக்கை அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறியதாக உள்ளது. அதுவும் எங்கள் நாட்டுக்குள் இருந்த அகதிகளின் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்கமுடியாது. இச்செயலுக்கு நான் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  

ns7.tv

Post a Comment

0 Comments