அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் முதல் முறையாக நுழையும் இரண்டு தமிழர்கள் உலக அரங்கில் தமிழர்களுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளார்கள் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், ''அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதி சபைக்கு முதல் முறையாக தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி சிகாகோவிலிருந்தும், முதல் பெண் ஆக பிரமிளா ஜெயபால் சியாட்டில் பகுதியிலிருந்தும் வெற்றி பெற்றிருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலநாடுகளின் நாடாளுமன்றங்களில் தமிழர்கள் வீற்றிருக்கும் நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றி மூலம் அமெரிக்காவில் இதுவரை தமிழர்கள் இல்லையே என்ற குறையைப் போக்கி, இரு தமிழர்களும் உலக அரங்கில் தமிழர்களுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளார்கள். அவர்கள் பணி இந்திய நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இரு தமிழர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த அமி பெரா, ரோஹித் கன்னா, கமலா ஹரீஸ் ஆகியோர் வெற்றி பெற்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைவது நம் நாட்டிலுள்ள அனைவருக்கும் இனிய செய்தியாகும். அவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
0 Comments