Ticker

6/recent/ticker-posts

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் 81.50 லட்சம் பேர் வேலையிழப்பு: மம்தா கடும் சாடல்

பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் சுமார் 81.50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நிர்வாகக் குழு சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, பணமதிப்பு நீக்கத்தினால் மாநிலத்திற்கு ரூ.5500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

“கடந்த 2 மாதங்களில், பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின் மாநில அரசுக்கு ரூ.5,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 1.7 கோடி மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்காளத்தில் 81.50 லட்சம் பேர் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர்” என்றார்.
மாநில அரசு மேற்கொண்ட ஆய்வுகளின் படி பெற்ற தரவுகளின் அடிப்படையில் இதனை தான் தெரிவிப்பதாக அவர் கூறினார். தேயிலை, சணல், பீடி மற்றும் ஜுவெல்லரி தொழில்களில் அதிகமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் மம்தா. 

“வேளாண் துறையும் பயங்கர பாதிப்புக்குள்ளானது. பணத்தட்டுப்பாட்டினால் விவசாயிகள் ராபி பயிர் செய்ய முடியவில்லை. இதனால் விலை உயர்வு ஏற்படும். மக்களிடம் பணமேயில்லாத போது ரொக்கமற்ற பொருளாதாரத்தை அறிமுகம் செய்ய முயற்சி செய்கின்றது மத்திய அரசு. 

எனவே குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் கீழ் அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கிடையே உள்ள வித்தியாசங்களை மறந்து அடுத்த பொதுத்தேர்தல்கள் வரை தேசிய அரசை உருவாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாட்டின் நலனுக்காக இதனைக் கூறுகிறேன். நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்றுமாறு நான் குடியரசுத்தலைவரிடத்திலும் முறையீடு செய்கிறேன். 

இந்தத் தேசிய அரசை மோடியைத் தவிர வேறு பாஜக தலைவர் வழிநடத்தினாலும் சரியே. இப்போது பார்த்தால் அரசே செயல்படவில்லை என்பது போல் இருக்கிறது. ஜனநாயக உரிமைகள் அடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நிர்வாகம் என்ற பெயரில் நாட்டில் பயங்கரத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

Post a Comment

0 Comments