Ticker

6/recent/ticker-posts

கப்பல்துறையை குறிவைக்கும் ஹேக்கர்கள்: திணறும் கப்பல் நிறுவனங்கள்

சைபர் கீல் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு கப்பல் நிறுவனத்தின் மின்னஞ்சல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தனர்.
``கப்பல் நிறுவனத்தின் இணையத் தரவுகளில் அத்துமீறி நுழைந்த கணினி ஹேக்கர்கள், அதில் ஒரு சிறிய வைரஸை வைத்துள்ளனர். இதன் மூலம் கப்பல் நிறுவனத்தின் நிதித்துறையில் இருப்பவர்களின் மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் கண்காணித்துள்ளனர்`` என்கிறார் சைபர் கீல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன்.

கப்பல் நிறுவனத்திற்கு எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனம் கட்டணம் செலுத்துமாறு கப்பல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பும் போதெல்லாம், அந்த மின்னஞ்சல்களை கப்பல் நிறுவனத்தின் ஊழியர்கள் பார்க்கும் முன்பே அதில் வேறு வங்கிக் கணக்கு எண்ணை வைரஸ் சேர்த்துள்ளது.
இதனைக் கப்பல் நிறுவனம் கண்டுபிடிக்கும் முன்பு, பல மில்லியன் டாலர்கள் ஹேக்கர்களின் வங்கிக் கணக்குக்கு சென்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடந்த சைபர் தாக்குதலில், உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனங்களில் ஒன்றான `மேர்ஸ்க்` கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.
`நாட்பேட்யா` எனும் சைபர் தாக்குதலினால், தனது துணை நிறுவனமான ஏபிஎம்-ஆல் நடத்தப்படும் சில துறைமுக முனையங்களை மூடும் அளவிற்கு `மேர்ஸ்க்` நிறுவனம் பாதிப்படைந்தது.
டிஜிட்டல் தாக்குதல் ஏற்படுத்தும் இடையூறுகளால் சரக்கு போக்குவரத்து சேவை பாதிக்கப்படக்கூடும் எனக் கப்பல் நிறுவனங்கள் நன்றாக அறிந்துள்ளன.
சரக்கு கப்பல் நிறுவனத்தின் கணினி வலையமைப்பை ஹேக் செய்வதன் மூலம், ஹேக்கர்களால் முக்கிய தகவல்கள் கூட பார்க்க முடிகிறது. அதுவும், கடல் கொள்ளையர்களால் இத்தகவல்கள் ஹேக் செய்யப்படுவது மிகவும் மோசமான விஷயமாக உள்ளது.
குறிப்பிட்ட கப்பலில் என்ன சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது என்பதை அறிந்து, அதற்கு ஏற்றக் கொள்ளை திட்டங்களை கடல் கொள்ளையர்கள் வகுக்கின்றனர்.
தற்போது கணினிமயமாக்கப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், கணினி வலையமைப்பு தாக்குதல் பலரை கவலையடைய செய்துள்ளது.
அதிலும் `நாட்பேட்யா` போன்ற மால்வேர்கள் ஒரு கணினியில் இருந்து மற்றோரு கணினிக்குப் பரவும் விதத்தில் தயாரிக்கப்பட்டவை. இதனால் ஒரு கப்பலில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கணினி சாதனங்களும் சுலபத்தில் பாதிக்கப்படக்கூடும்.
கப்பலுக்கு வழிகாட்டும் `மின்னணு விளக்கப்படக் காட்சிகளும்` வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
சரக்கு கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த மாலுமி ஒருவர், அச்சிட வேண்டிய சில கோப்புகளை யூ.எஸ்.பி ஸ்டிக்கில் கொண்டுவந்துள்ளார். அவரது யூ.எஸ்.பியில் இருந்து கப்பலில் கணினி வலையமைப்புக்குள் வைரஸ் பரவியது. இந்த வைரஸ் கப்பலுக்கு வழிகட்டி செயலி உள்ளிட்ட பலவற்றை தாக்கியுள்ளது.
இது போன்ற வைரஸ்களால் சரக்கு கப்பல் தொழில் பலத்த பின்னடைவைச் சந்திக்கின்றன. ஆனால் உண்மையில் மோசமான விஷயம் என்னவென்றால், கப்பலின் கணினி வலையமைப்புகளை ஹேக் செய்வதன் மூலம் கப்பலையே அழிக்க வைக்கும் சாத்தியங்கள் உள்ளன.
இந்நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பு, ஹேக்கர்களிடம் இருந்து கப்பல் நிறுவனங்கள் எப்படித் தப்பிக்க வேண்டும் என்ற வழிகாட்டல்களைச் அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
யூ.எஸ்.பி உள்ளிட்ட தனிப்பட்ட டிஜிட்டல் உபரகணங்களால் கூட, கப்பலின் கணினி வலையமைப்பு பதிக்கப்படும் என்பதால் இது குறித்து மாலுமிகளுக்குச் சிறந்த புரிதலை ஏற்படுத்த உள்ளன.
உலகில் 51,000த்துக்கும் மேற்பட்ட வணிக கப்பல்கள் உள்ளன. உலகின் 90% வர்த்தகம் இந்த கப்பல்கள் மூலமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. bbc.com

Post a Comment

0 Comments