Ticker

6/recent/ticker-posts

வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து விட்டீர்களா...? முறைப்பாடுகளைத் தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

( ஐ. ஏ. காதிர் கான் )

இவ் வருடத்திற்கான வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் நடவடிக்கைகளின் ஆரம்பப் பணிகள்  தற்பொழுது முடிவடைந்துள்ள நிலையில், அதற்குரிய ஆவணங்கள் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை, மாவட்டத் தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், கிராம அலுவலர் காரியாலயங்கள் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.    

  வாக்காளர் இடாப்பில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பிலான எதிர்புக்களைத் தெரிவிக்க, எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளநிலையில், பெயர் பட்டியலில் தமது பெயர்கள் இடம்பெறாதவர்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடியும் என்று, மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்துள்ளார். 

 விண்ணப்பப் படிவங்களை  உரிய விதத்தில் பூர்த்தி செய்து, எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னதாக, உரிய மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும். அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மாவட்டம் என்பவற்றை உட்சேர்த்து, 2017 தேருநர் இடாப்பில் தங்களது பெயர் பதிவதற்காகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்துப் பார்த்து விண்ணப்பிக்க முடியும் என்றும், மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

   மேல் மாகாண கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்கள் 011 2867472 அல்லது கொழும்பு மா நகரத்தில் உள்ளோர் 011 2872247 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும். கம்பஹா மாவட்டத்தில் வசிப்போர் 033 2222047, களுத்துறை மாவட்டத்தில் வசிப்போர் 034 2222266 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகக் கதைக்க முடியும் என்றும், மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் வாக்காளர்களை 
அறிவுறுத்தியுள்ளார். 

   வாக்கு, ஒவ்வொருவரினதும் உரிமை. அதனிலும் பார்க்க, ஒவ்வொருவருக்குமுள்ள ஒரு பொறுப்பு. வாக்களிப்பதற்கு, வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருத்தல் கட்டாயத் தேவைப்பாடொன்றாகும். சரியாகப் பதிவு செய்வதன் மூலம், வாக்களிக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் நிச்சயப்படுத்திக் கொள்ளவும் என்றும் மேலதிகத் தேர்தல் ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார். 

Post a Comment

0 Comments