தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கையில் ஜனநாயகத்துக்கு முரணாக சிறுபான்மையினரை பாதிக்கக்கூடிய பல சிக்கல்கள் உள்ளன. அவை திருத்தியமைக்கப்படாத விடத்து பழைய விருப்பு வாக்குமுறைமைக்குச் செல்வதில் ஆட்சேபனையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்ட எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை குறித்து பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கருத்து தெரிவிக்கும்போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
சிறுபான்மையினங்களைக் கவனத்திலெடுக்காது எல்லை நிர்ணயக் குழுவினர் நடந்துகொண்ட தவறு குறித்து நான் இதற்கு முன்னரும் பாராளுமன்ற அமர்வின்போது எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன். 1981 ஆம் ஆண்டு மேற்கொண்ட குடிசன மதிப்பின் அடிப்படையிலேயே மாகாண சபை உறுப்பினர்களின் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது 1988 ஆம் ஆண்டு மாகாண சபை சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2003 ஆம் ஆண்டு அப்போதைய தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவினால் திருத்தம் குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அவரின் கூற்றுக்கமைய இதுவரை அத்திருத்தம் நிறைவேற்றப்படவில்லை. உதாரணத்திற்கு மேல் மாகாண சபையில் 104 பிரதிநிதிகளே இன்னும் உள்ளனர். ஆனால் திருத்தத்திற்கமைய 139 உறுப்பினர்களாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விடயத்தில் எல்லை நிர்ணயக்குழு கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. இதுபோன்றே அன்றைய சனத்தொகைக்கமைய 116000 பேர் கொண்ட தொகுதியொன்றுக்கு ஓர் உறுப்பினர் என்ற நிலையில் பல்வேறு இன, மத, சமூகத்தின் கணிசமாக வாழும் தொகுதியொன்றில் பல அங்கத்தவர் தொகுதியாக்கப்படும் விடயத்திலும் எல்லை நிர்ணயக்குழு பாராமுகமாகவே காரியமாற்றியுள்ளது. அத்துடன் அவர்கள் பல அங்கத்தவர் தொகுதி விடயத்தில் வேடிக்கையான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். இரட்டை அங்கத்தவர் தொகுதியென்றால் 230000 வாக்காளர் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே குழுவுள்ளது. இது பாரதூரமான தவறாகும். சிறுபான்மை இன, மத, சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அல்லது மாகாண உள்ளூராட்சி சபைகளில் இடம்பெறச் செய்வதற்கே பல அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலமே சிறுபான்மையினருக்கு தம் அபிலாசைகளை மேற்படி சபைகளில் எத்திவைக்கும் வாய்ப்புள்ளது. இதுவே மேலான ஜனநாயக முறைமையாகும். இதுவும் எல்லை நிர்ணயக்குழுவால் தட்டிக்கழிக்கப்பட்டே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
விருப்பு வாக்குத் தெரிவு முறைமை வருவதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு இரட்டை பல அங்கத்தவர் தொகுதிகள் பல நாட்டில் இருந்துள்ளன. கொழும்பு மத்திய தொகுதியில் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதேபோன்று நுவரெலியா, மஸ்கெலியா தொகுதியில் மூன்று அங்கத்தவர் தெரிவாகும் நிலை இருந்துள்ளன. பேருவளை, ஹரிஸ்பத்துவ, மட்டக்களப்பு, பொத்துவில் ஆகிய தொகுதிகளில் தலா இருவர் வீதம் பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர். இதே முறைமையொன்றே புதிய முறைமையில் கொண்டு கொண்டு வரப்பட வேண்டும்.
புதிய முறைமை கொண்டு வருவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் புதிய முறையில் சிறுபான்மை இனங்களின் பிரதிநித்துவம் இல்லாமலாக்கப்படும் குளறுபடிகளையே நான் எதிர்க்கிறேன். இது உண்மையான ஜனநாயகத்திற்கு விழும் ஓர் அடியென்றே கூறுகிறேன். இந்நாட்டிலுள்ள சகல இன, மத, கோத்திரங்களைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மையுள்ள சபையொன்றே நாட்டின் நலனுக்கும் அமைதிக்கும் அவசியமாகும். நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்தை இதன்மூலமே உறுதிப்படுத்த முடியும். அதுவே நாட்டில் நல்லாட்சியை மலரச்செய்ய முடியும். இது பாராளுமன்றத்தில், மாகாண சபைகளில், உள்ளூராட்சி மன்றங்களில் மிளிரச்செய்ய வேண்டும்.
இவ்வாறு நாம் நியாயத்தை முன்வைக்கும்போது சிலர் இனவாதம் என்ற சாயத்தை எம்மீது பூசுகிறார்கள். ஹக்கீம், ரிஷாத் பதியுதீனின் சில கருத்துகளுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் எல்லை நிர்ணயக்குழு அப்பட்டமாக சிறுபான்மையினங்களை புறக்கணிக்கும் வகையிலே தன் அறிக்கையை தயாரித்துள்ளமையையே இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.
முஸ்லிம் அல்லது தமிழர் ஒருவருக்கு இந்நாட்டில் ஜனாதிபதியாக வரமுடியாது. இது சட்டத்தில் தடை செய்யப்பட்டிருப்பதில்லை. ஆனால் பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எமது நாட்டு மக்கள் இப்படிப் பழக்கப்பட்டுள்ளார்கள். அதேபோன்று சிறுபான்மையினருக்கு பிரதமராக வரவும் கூட முடியாத நிலைதான் இங்கு நிலவுகிறது. சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் லக் ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்கும் வாய்ப்பு ஏற்பட்டபோதும் சந்திரிக்காவை சூழ்ந்திருந்த ஒரு சிலரின் அழுத்தம் காரணமாக அந்த வாய்ப்பிலும் மண் விழுந்து போனது.
அமெரிக்காவில் சிறுபான்மையின ஒபாமா நாட்டின் அதிபதியானார். இந்தியாவில் மன்மோகன்சிங் பிரதமரானார். அங்கு அப்துல்கலாம் ஜனாதிபதியானார். அந்நாடுகளில் மனித உள்ளங்கள் பண்பட்டுள்ளன. இங்கு புண்பட்ட உள்ளங்களையே காணமுடிகிறது. இந்நிலையில் சிறுபான்மையினங்களுக்குள்ள சிறு வாய்ப்பும் கூட தட்டிக்கழிக்கப்படுமானால் இதனால் விளையும் விபரீத விளைவுகளை நாம் முப்பது வருட யுத்தத்தில் அனுபவித்துக்கொண்டோம். அத்தகைய இருண்டயுகம் ஒன்றை யாரும் விரும்பவே மாட்டார்கள்.
1971, 1989 களில் எமது நாடு இளைஞர் கிளர்ச்சிகளைக் கண்டு கொண்டது. தேர்தலில் பிரதிநிதித்துவம் பெற சிறு கட்சிகளுக்கு 12 வீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ 5 வீதமாகக் குறைத்ததால் ஒன்று, இரண்டு பிரதிநிதிகளைப் பெறும் ஜே.வீ.பியால் 6 உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதேபோன்று சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெற்று பாராளுமன்றத்தில் நுழைய முடிந்தது.
இது ஜனநாயகம் பூரணத்துவம் பெற நல்லதொரு வாய்ப்பாகவுள்ளது.
சிறுபான்மையினங்களும் தம் கருத்துகளை வாத, விவாதங்கள் மூலம் முன்வைக்க முடியும். சபைக்கு வெளியே இவர்கள் விடப்படும்போது தம் கருத்துகளுக்கு மதிப்பிழக்கப்பட்டு இவர்கள் கிளர்ச்சிகளில் குதிப்பது தவிர்க்க முடியாது போகும்.
இதன்மூலம் எல்லை நிர்ணயக்குழு விட்ட தவறு நன்கு ஊர்ஜிதப்படுகிறது. பல அங்கத்தவர் தொகுதி குறித்து கரிசனை காட்டவில்லை. ஏன் அதனைப் புதிய அறிக்கையில் இருந்து நீக்கியது. இதனால் சிறுபான்மை பிரதிநிதித்துவம்தான் இல்லாது போகும் பாரதூரமான தவறு இடம்பெற்றுள்ளது. இக்குறைபாடுகள் திருத்தப்பட்டு புதியமுறை கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு இல்லாது போனால் பழைய விருப்புவாக்கு முறைமைக்கு செல்லவும் நாம் தயாராகவே உள்ளோம்.
நாட்டில் புதிய பிரச்சினைகள், மோதல்கள் தலைதூக்காதிருக்க இதுவொன்றே சரியான வழியாகும் என்றார்.
(நன்றி ஏ.எல்.எம்.சத்தார்)
0 Comments