Ticker

6/recent/ticker-posts

மெளலவிமார்கள் மத நல்லிணக்க செயற்பாடுகளில் கலந்துகொள்ள வேண்டும் - வானொலி நிகழ்ச்சியில் வத்துரகும்புர தம்மரத்தின தேரர்

( ஐ. ஏ. காதிர் கான் )
 
   இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மௌலவிமார்கள்,  தங்கள் பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றவில்லை என,  வத்துரகும்புர தம்மரத்தின தேரர் தெரிவித்துள்ளார். 

   கண்டி - திகன,  தெல்தெனிய சம்பவம் இடம்பெற்ற போது, வெள்ளிக்கிழமை ஜும்ஆத்  தொழுகை நடாத்த பள்ளிவாசலுக்குக் காவல் இருந்த வத்துரகும்புர தம்மரத்தின  தேரரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

   வானொலி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தேரர்,   மேலும் கூறுகையில்,
   “இலங்கையில் உள்ள மௌலவிமார்கள்,  தங்களது  பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றவில்லை.இது தொடர்பில்,  முஸ்லிம் மௌலவிமார்கள், நாளை என்னை  விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை . இவ்வாறு நான் கூறுவதற்குப் பல  காரணங்கள்  உள்ளன.

   நான் யட்டியகல பன்சலையின் பிரதம தேரர்.  நான் யட்டியகலவிற்கு வந்து,  தற்போது 13 வருடங்கள் ஆகின்றன. யட்டியகலவில் இருக்கும் எனக்கு,   ரன் பண்டாரவின் மனைவி உக்குமெனிக்காவின் மகன்  நெத்த பொடிபண்டா மற்றும் அவரின் மகன் கயான் ஆகியோரைத் தெரியும்.  இவர்களின் குடும்பத்தைப்  பற்றி நான் நன்கு அறிந்து தெரிந்து வைத்துள்ளேன். இவர்களின் பிரச்ச்சினைகளையும் நான் அறிந்துவைத்துள்ளேன்.
   கண்டி - திகன பிரச்சினையின் போது, நான் தெஹியங்க பள்ளிவாசல் மௌலவிமார்களுடன் கதைத்தேன்.

   ஒருவர்  புத்தளம், மற்றவர் மன்னார்.  பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், எங்கிருந்தாவது இருந்து மௌலவிமார்களைக் கூட்டி வந்து பணியில்  அமர்த்தியுள்ளார்கள்.
மெளலவிமார்கள் மதவழிபாடுகளில் ஈடுபடுவதோடு மாத்திரம்  நின்றுவிடுகிறார்கள். இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இவர் அந்த ஊருக்காக , ஊரின் மத நல்லிணக்க செயற்பாடுகளுக்காக என,  எந்த ஒரு விடயங்களிலும் கலந்துகொள்வதில்லை.

   பிரதேச பௌத்த சமூகங்களோடும்,  மதகுருமார்களுடனும் எந்தவிதத்  தொடர்புகளையும்  ஏற்படுத்திக்கொள்ள  முற்படுவதில்லை.     இவர்கள், சம்பளத்திற்கான வேலையை மாத்திரம்  செய்கின்றார்கள்.  இதனை மாற்றவேண்டும்.

பள்ளிவாசல்களுக்கு முடியுமானவரை,  அப்பிரதேச  மௌலவிமார்களையே நியமிக்க வேண்டும். ஊரில் உள்ளவர்களின் விபரங்களை இவர்கள் அறிந்து வைத்திருக்கவேண்டும்.  
மௌலவிமார்கள், அவர்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.  பெரும்பான்மையான மெளலவிமார்கள் இதனைச்  செய்வதில்லை என்றே நான் கருதுகின்றேன்” என, வத்துரகும்புர தம்மரத்தின தேரர், வானொலி நிகழ்ச்சியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments