கம்பனி பதிவுகளை மட்டுமே ஒன்லைனில் மேற்கொண்டு
வந்த கம்பனி பதிவாளர் திணைக்களம், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அந்த
நடைமுறையை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் நிறுவனங்கள், செயலாளர்கள், கணக்காய்வாளர்கள், சங்கங்கள் ஆகியவையும்
ஒன்லைனில் பதிவுகளை மேற்கொள்ள எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக
பதிவாளர்
திணைக்கள நாயகம் ஆர்.எஸ். சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர்
மீள்குடியேற்றம், கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும் கம்பனி பதிவாளர் திணைக்கள
அதிகாரிகளுக்கும் இடையே இன்று(17) காலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
இந்த
சந்திப்பின் போது கம்பனி பதிவாளர் திணைக்களம் தொடர்பில் பல முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுவருவதாகவும், மோசடிகள் இடம்பெறுவதாகவும் தமக்கு தகவல்
கிடைத்துவருவதால் உயர் மட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி
முறைகேடுகள் இடம்பெறாது பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது கம்பனி பதிவாளர்
திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், அவற்றை காலத்திற்கு பொருத்தமான முறையில்
மாற்றுவது தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
“கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கம்பனிகளை ஒன்லைன்
மூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகளை கம்பனி பதிவாளர் திணைக்களம் ஆரம்பித்திருந்தது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் கைத்தொழில் அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னரே அதன் கீழான
வரும் இந்த திணைக்களம் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது” என கம்பனி பதிவாளர் நாயகம் மேலும்
தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட் கிழமை முதல்
நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த ஒன்லைன் விஸ்தரிப்பு திட்டத்திற்கு ரூபா. 47 மில்லியன்
செலவிடப்பட்டுள்ளதாகவும், இந்த
செலவீனங்கள்
அனைத்தும்
கம்பனி பதிவாளர் திணைக்களத்தினால் கிடைத்த இலாபத்தைக் கொண்டே செலவிடப்படுவதாகவும்
அவர் தெரிவித்தார்.
புதிய ஒன்லைன் நடைமுறை எதிர்வரும் மார்ச் மாத
இறுதிக்குள் முழுமையான பயனை அளிக்க கூடியதாகவிருக்கும் எனவும் பதிவுக்கான ஆவணங்கள்
ஒன்லைனில் பதிவேற்றப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் உரிய நிறுவனங்கள் பதிவுக்குள்ளாக்கப்படும்
எனவும் அவர் குறிப்பிட்டார். இதுவரை காலமும் இந்த நடைமுறைக்கு சுமார் 04 நாட்கள் வரையில்
தேவைப்பட்டது எனவும், பதிவுகளை
நாடிவருவோர் வீண் அலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்த வசதியை புதிய நவீன
திட்டத்தை உருவாக்க ஆலோசனை தந்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு இந்த வகையில் நன்றி
தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பதிவுகள் ஒரு மணி நேரத்திற்குள் பூர்த்தி
செய்யப்பட்டாலும், இணைய
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பதிவு செய்தவர்களே நேரடியாக வந்து அந்த ஆவணங்களை நேரடியாக
பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments