இந்தியா உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இந்து மாணவர்களுக்காகக் கோயில் கட்டவேண்டும் என்று பாஜகவின் இளைஞர் அமைப்புத் தலைவர் கோரிக்கை விடுத்தள்ளார். இந்த பல்கலைக்கழகம் 1875ம் ஆண்டு சேர். செய்யத் அஹ்மத் அவர்களால் நிறுவப்பட்டதாகும். முஹம்மதன் எங்லோ ஒரியன்டல் கொலேஜ் The Muhammadan Anglo-Oriental College என்ற பெயரில் அரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி 1920ம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாவட்டத் தலைவர் முகேஷ் சிங் லோதி இதுதொடர்பாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
''அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான சர் சையது அகமது கான், இந்துக்களும் முஸ்லிம்களும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இரண்டு கண்கள் என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இந்து கோயிலைக் கட்டுவதற்கான ஊக்க சக்தியாக துணை வேந்தர் பார்க்க வேண்டும்.
பல்கலைக்கழக வளாகத்தில் கோயில்கள் இல்லாததால், ஆயிரக்கணக்கான இந்து மாணவர்கள் பிரார்த்தனை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால் கோயில் கட்டப்பட வேண்டும்.
இதன்மூலம் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை துணை வேந்தர் அதிகரிக்கவேண்டும். அவர் கோயில் கட்டுவதற்கான நிலத்தை அளிக்க வேண்டும்.
என்னுடைய கடிதத்துக்கு 15 நாட்களுக்குள் அவர் பதில்தர வேண்டும் இல்லையெனில் எங்கள் அமைப்பின் தொண்டர்கள் வளாகத்துக்குள் நுழைந்து கோயில் கட்டுவர்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஏஎம்யூ செய்தித்தொடர்பாளர் ஷஃபே கித்வாயிடம் கேட்டபோது, ''லோதியிடம் இருந்து இதுவரை கடிதம் எதுவும் வரவில்லை. அதனால் அதுகுறித்துக் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது'' என்று முடித்துக்கொண்டார்.
ஏஎம்யூ மாணவர் அணியின் துணைத் தலைவர் ஹம்ஸா சஃப்யான், ''மக்களவைத் தேர்தலுக்காகவே இத்தகைய ஸ்டன்ட்கள் நடத்தப்படுகின்றன. அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதித்தால் மட்டுமே கோயில் கட்ட அனுமதிக்கப்படும்'' என்றார்.

0 Comments