Ticker

6/recent/ticker-posts

இலங்கை விடயத்தில் வேடிக்கை பார்க்க வேண்டாம் சம்பந்தன் எடுத்துரைப்பு!

இலங்கை அரசு பன்னாட்டு சமூகத்துக்கு  பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை பன்னாட்டு சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக கைகட்டி வேடிக்கை  பார்ப்பவர்களாக இருக்க முடியாதுஎன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறியுள்ளார்.


ஜப்பானின் இராஜதந்திரியும்,  ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  ஊடகப்பிரிவு  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள போதும் அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை இலங்கையில் போரை  முடிவுக்கு கொண்டு வருவதில் பன்னாட்டு சமூகம் பெரிய பங்களிப்பை அரசுக்கு வழங்கி இருந்தது. எனினும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தொடர்பில் இலங்கை அரசு பன்னாட்டு சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

பன்னாட்டு சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக கைகட்டி வேடிக்கை  பார்ப்பவர்களாக இருக்க முடியாது.  வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற செய்வது பன்னாட்டு சமூகத்தின் கடமையாகும். இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல மாறாக முழு நாட்டுக்கும் கேடாக அமையும் என்றார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா  மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments