இந்தியா, தமிழ்நாடு கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்த அங்கொட லொக்கா தனது பெயரை மாற்றியது மட்டுமின்றி உருவத்தையும் மாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விதமான குற்றச்சம்பவங்களுடைய நிழல் உலக தாதாவாக வலம் வந்த அங்கொட லொக்கா, இலங்கையில் இருந்து தப்பி கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் தஞ்சம் புகுந்து பிரதீப் சிங் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
கடந்த ஜூலை 3ம் திகதி அங்கொட லொக்கா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவருடைய மரணத்தின் பின்னணியில் இருக்கும் இரசியங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்திய சிபிசிஐடி பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இலங்கையில் அங்கொட லொக்கா பல்வேறு விதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இது தொடர்பாக இலங்கை பொலிசாரின் உதவியையும் இந்திய பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது. அங்கொட லொக்கா தனது பெயரை மாற்றி தன்னுடைய அடையாளத்தை மறைக்க நினைத்த அங்கொட லொக்கா, அடுத்தகட்டமாக அவருடைய உருவத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது முகத்தை மாற்றக்கூடிய வகையில் மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். தான் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதால் இத்தகைய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டதாக அங்கொட லொக்கா மருத்துவர்களுக்கு தெரிவித்திருப்பதாக தென்னிந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூக்கு அறுவை சிகிச்சையின் பின்னர் தனது முகத்தையும் மாற்றிக்கொண்டு வெளிநாடுகளில் தப்பி சென்று அடையாளத்தை மறைக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் இந்திய சிபிசிஐடி பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
0 Comments