பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை இந்த சேமிப்பு தொட்டிகளை திறந்து காட்டுமாறு பொதுமக்கள் கோர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள தாங்கிகளை திறந்து காட்டுமாறு வரிசையில் காத்திருக்கும் மக்களால் கோரப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் தாங்கிகளை திறக்க முற்படும் போது நாசகார செயலோ அல்லது ஒரு விபத்தோ ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் தொட்டிகளை திறப்பது காவல்துறை அதிகாரிகளின் கடமை அல்ல என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அனுமதி உள்ளவர்கள் மட்டுமே இதனை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments