கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள சஸ்காட்செவனில் (Saskatchewan) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஒரு கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதோடு மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு டேமியன் சேண்டர்சன் மற்றும் மைல்ஸ் சேண்டர்சன் என்ற இரண்டு நபா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் அறிவித்துள்ளனா். அத்தோடு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நபா்கள் கறுப்பு நிற நிசான் ரோக் காரில் சஸ்காட்செவன் லைசென்ஸ் தகடுடன் பயணிப்பதாக பொலிசாா் நம்புகின்றனா். சந்தேக நபா்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசாா் மும்மரமாக ஈடுபட்டுள்ளனா்.
"இந்த நபர்களைக் கைது செய்ய
நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று ரோயல் கனேடியன் மவுண்டட் காவல்துறையின் உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் கூறியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 5:40 மணிக்கு முதல் முதலாவது கத்திக்குத்து தாக்குதல் தொடா்பாக தகவல் வந்ததாகவும், சில நிமிடங்களில் கூடுதல் கத்திக்குத்துகள் குறித்து பல தகவல்கள் கிடைத்ததாகவும் பிளாக்மோர் கூறியுள்ளாா்.
இந்த கத்திக்குத்து தாக்குதல்கள் பயங்கரமானது மற்றும் கவலையளிக்கக் கூடியதுமாகும் என்று கனேடிய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
தனது டுவீட் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோ "நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுருத்தல்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் கூறியுள்ளாா்.

0 Comments