வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் வைத்தியரின் அலட்சியத்தால் புதிதாக திருமணமான பெண், புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம அகால மரணமடைந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் கடந்த மாதம் 13ஆம் திகதி திருமணம் செய்திருந்தாா். அண்மையில், சிறு சுகவீனம் காரணமாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஹசஞ்சய குணவர்தனவை சந்தித்துள்ளார்.
அவரைப் பரிசோதித்த வைத்தியர், பித்தப்பையின் ஒரு பக்கத்தில் கல் இருப்பதாகத் தெரிவித்ததோடு, வத்தளையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளார். அதன்படி புத்திகா ஹர்ஷனி கடந்த மாதம் 31ம் தேதி அறுவை சிகிச்சைக்காக குறித்த தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்திரசிகிச்சையின் பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவர், ராகம போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இருபத்தைந்து நாட்களாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறை சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

0 Comments