செப்டெம்பர் 15ம் திகதிக்குள் கோதுமை மா பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், அதிகரித்து வரும் பாணின் விலைகள் குறைந்துவிடும் என்றும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ ஜா-எல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
டொலர் பிரச்சினை காரணமாக நாட்டுக்கு தேவையான கோதுமை மாவை இறக்குமதி செய்வதில் முக்கிய இரண்டு நிறுவனங்களும் சில பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், இந்திய கடன் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டதாக நளீன் பெர்னாண்டோ இங்கு தெரிவித்தார்.
ஆனால் ரஷ்யா உக்ரைன் யுத்தம் காரணமாக கோதுமை இறக்குமதி பிரச்சினையாகி இந்தியா மாவு ஏற்றுமதியை நிறுத்தியதன் காரணமாக கோதுமை மா இறக்குமதி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் உள்ள பிரச்சனை (15) நாளுக்குள் மறைந்துவிடும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
கோதுமை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது சுமார் ஒரு மாதத்திற்கு தேவையான கோதுமை அவர்களிடம் இருப்பது தெரியவந்ததாகவும் நளீன் பெர்னாண்டோ கூறினார்.
இதன்படி, கோதுமையை மாவு செய்து சந்தைக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், வாரத்திற்கு ஒருமுறை நிறுவனங்கள் சந்தைக்கு வெளியிடும் மாவின் அளவை சரிபார்க்க நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

0 Comments