நிதி உதவி தொடர்பாக சவுதி அரேபியாவுடனான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய முடியும் என்று பாகிஸ்தான் நம்புவதாக பாகிஸ்தானின் நிதி அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது ஒன்பதாவது மதிப்பாய்வை இறுதி செய்ய பாகிஸ்தானிடம் கூடுதல் தகவல்களைக் கேட்டிருப்பதாகவும் ஒரு செய்தி மாநாட்டில் இஷாக் தார் கூறினார்.
சவுதி அரேபியாவிடம் இருந்து நிதி உதவி பெறுவதில் முன்னேற்றம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "சவுதி அரேபியாவுடன் நாங்கள் தொடங்கிய பேச்சுவார்த்தையை விரைவில் வெற்றிகரமாக முடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளாா்.
பாக்கிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் கடன் செலுத்துவதற்கான பொறிமுறை பலத்த நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் மத்திய வங்கியின் கையிருப்பு $6.7 பில்லியனாக குறைந்துள்ளது. இது ஒரு மாத இறக்குமதி செலவுக்கு போதுமானதாக இல்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒன்பதாவது மறுஆய்வு தாமதமானதால், பாகிஸ்தானுக்கு அவசர அடிப்படையில் வெளிநாட்டு நிதி தேவைப்படுகிறது.
மறுஆய்வுக்காக காத்திருக்கும் நிலையில், நிதி உதவி பெறுவதற்கு நட்பு நாடுகளை அணுக பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது, மேலும் நட்பு நாட்டிலிருந்து $3 பில்லியன் டொலரை பெற பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது என்று இஷாக் தார் கூறியிருக்கிறாா்.

0 Comments