Ticker

6/recent/ticker-posts

♦️ஃபேஸ்புக், டிக்டொக் போன்ற சமூக ஊடக டிஜிட்டல் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்துள்ளது 'அப்ஸ்க்ரோல்ட்' - UpScrolled செயலி.

 


♦️ஃபேஸ்புக், டிக்டொக் போன்ற சமூக ஊடக டிஜிட்டல் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்துள்ளது 'அப்ஸ்க்ரோல்ட்' - UpScrolled  செயலி.

சமூக ஊடக தளத்தில் உள்ள  டிஜிட்டல் ஏதேச்சதிகாரத்தை உடைத்தெறியும் நோக்கில், பாலஸ்தீன-அவுஸ்திரேலிய தொழில்நுட்ப வல்லுநரான இசாம் ஹிஜாசி (Issam Hijazi) இத்தளத்தை உருவாக்கியுள்ளார்.

முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான டிஜிட்டல் அரசியலுக்கும், கருத்துச் சுதந்திர நசுக்கல்களுக்கும் மாற்றாக, இந்த  'அப்ஸ்க்ரோல்ட்' (UpScrolled) தளம் உதயமாகியுள்ளது

இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களையும், காஸா மண்ணில் நிகழ்த்தப்படும் அத்துமீறல்களையும் உலகறியச் செய்யும் வீடியோக்களுக்கு  'அல்கோரிதம்' (Algorithm) என்பதை இரும்புக்கரமாக கொண்டு ஃபேஸ்புக்கின் மெட்டா (Meta) நிறுவனம் தணிக்கை செய்து வந்தது.

ஐபிஎம் (IBM) மற்றும் ஒரக்கிள் (Oracle) போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஹிஜாசி, டிஜிட்டல் உலகில் நிலவும் ஒளிவுமறைவான போக்கை மாற்றி, வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட இத்தளத்தைத் தொடங்கியுள்ளார்.

குறுகிய  காணொளிகளை (Short-form video) பதிவேற்றும் செய்யும் வசதிகளைக்  கொண்ட 'அப்ஸ்க்ரோல்ட்', அறிமுகமான 24 மணி நேரத்திற்குள்ளேயே உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தணிக்கையற்ற இந்தச் சமூக ஊடகச் செயலி, ஒரே நாளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பயனர்களைத் தன்பால் ஈர்த்து, ஒரு வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

இத்தளத்தின் உருவாக்கம் ஒரு தனிநபர் துயரத்தின் பின்னணியைக் கொண்டது. காஸாவில் நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல்களில் தனது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 60 உறவினர்களை இசாம் ஹிஜாசி இழந்தார். இந்த ஆறாத வடுவே, ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களுக்கு ஒரு சுதந்திரமான மேடையை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது.

முன்பு பாலஸ்தீன விவகாரங்களைப் பேசுவதற்கான களமாக இருந்த 'டிக்டொக்' (TikTok) தளம், இஸ்ரேல் ஆதரவுப் போக்கைக் கொண்ட ஒரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் போன்றோரின் கோர்ப்பரேட் ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு, கருத்துச் சுதந்திரம் அங்கு கேள்விக்குறியானது.

குறிப்பாக, முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் 'நிழல் தடை' (Shadowbanning) மற்றும் தணிக்கை முறைகள் மூலம் உண்மைகளை இருட்டடிப்பு செய்தன.

பாலஸ்தீன ஆதரவுப் பதிவுகளை, வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்குத் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. பதிவுகள் நீக்கப்பட்டன. இத்தகைய கசப்பான அனுபவங்களின் விளைவாகவே, ஒரு எதிர்ப்புப் போராட்டமாக இத்தளம் உருவெடுத்துள்ளது.

முகநூல் தனது வணிக லாபத்திற்காகவும், விளம்பரதாரர்களின் திருப்திக்காகவும் தகவல்களைத் தீர்மானிக்கும் நிலையில், 'அப்ஸ்க்ரோல்ட்' தளம் "நிழல் தடையற்ற" (No Shadowban) கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றுகிறது. எனினும், தணிக்கையற்ற தளம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இது தவறான செய்திகளுக்கும் வெறுப்புப் பேச்சுகளுக்கும் (Hate Speech) புகலிடமாக மாறிவிடாமல் பாதுகாப்பதே இதன் முன்னால் உள்ள பெரும் சவாலாகும்.

பாலஸ்தீன் மக்கள் மீதான அக்கிரமம் பற்றி அறிய வேண்டியவர்கள், டிஜிட்டல் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க விரும்புபவர்கள், 'கூகுள் பிளே ஸ்டோரில்' (Google Play Store) இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து, இந்த புதிய  மாற்றுத்தளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

Azeez Nizaruddeen

27.01.2026

Post a Comment

0 Comments