-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
“மக்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு அவர்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் செயற்பட்டே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளோம்” என்று ஜனாதிபதி தேர்தல் குறித்த தங்களது முடிவை வெளியிட முடியாத நிலைமைக்கு இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் சாணக்கியம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனை “தற்றுணிவு அற்ற தன்மை“ அல்லது “மதில் மேல் நிற்கும் பூனை“ என்று கூறுவதா? முஸ்லிம் பாடசாலை சிறுவர்கள் காலைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சலவாத்துச் சொல்லி கலைந்து செல்வதும் பின்னர் மறுநாளும் அவ்வாறே செய்வதும் போன்றே இந்த மாபெரும் கட்சியின் நிலைமை இன்றுள்ளது.
கூடுவதும் கலைவதும்.. கூடுவதும் கலைவதுமே கட்சியின் இன்றைய அன்றாட கடமையாகி விட்டது. அதேவேளை, பொதுசனத்தார் நிலைமையோ.. “வரும் ஆனா.. வராது“ என்ற சினிமா ஜோக் பாணியில் உள்ளது. “ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனவரி மாதம் எட்டாம் திகதி தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு வரும் மாலை நான்கு மணிக்குப் பின்னரே அறிவிப்பார்கள் என்று இன்று கிண்டலாகப் பேசப்படுகிறது.
கட்சியின் தீர்மானம் தாமதமாவதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அரசாங்கமும் எதிர்தரப்பும் தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதால் யாரை ஆதரிப்பதென இறுதித் தீர்மானம் எடுப்பதில் காலதாமதம் நிலவுவதாகவும் இருதரப்புடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றைய விடயம் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமைகள். இந்த இரண்டுமே தீர்மானத்தை தாமதப்படுத்துகின்றனவாம்.
தாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் மக்கள் ஏலவே தீர்மானித்துள்ள நிலையில், மக்கள் விரும்பாத தரப்பினர் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்தாலும் அதனை ஏற்கவோ நம்பவோ தயாராக இல்லை. இந்த நிலையில் கட்சியின் தலைமை இரு தரப்பினருடனும் பேசுவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு அவர்கள் செய்வார்களானால் அது அவர்களது சுய நலத் தேடலின் பின்னணியாகவும் இருக்கலாம்.
மேலும் கட்சிக்குள் பிளவு ஏற்படலாம். பிரிவு வரலாமென்பதற்காக அதனைத் தவிர்க்கும் வகையிலான ஒரு சுமூக நிலை ஏற்படுத்தப்பட்ட பின்னர் தீர்மானத்தை அறிவிப்பதாக இருந்தாலும் அதுவும் நடக்காத காரியமே. ஏனெனில் பிளவு, பிளவுதான் அதில் ஐக்கியம் ஏற்படப் போவதில்லை. கட்சிக்குள் இந்த விடயத்தில் ஒட்டு மொத்த இணக்கம் நிலவும் என்றால் இந்த தீர்மானத்தின் தாமத்துக்கான காரணங்களில் ஒன்றாக இது அமைந்திருக்கவே முடியாது அல்லவா?
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கத் தீர்மானித்த போது அவரது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படலாமென என தெரியாதவராக இருக்கவில்லை. ஆனால், அவர் தனது தீர்மானத்தில் பின்னிற்கவில்லை.
“அரசியலில் எந்த விடயத்துக்கும் அவசரப்படக்கூடாது. நிதானமாக தூர நோக்கோடு சிந்தித்து இயன்றவரை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சரியான தீர்மானத்துக்கு வருவதற்கு முயற்சித்து வருகிறது. எந்தக் கட்சியும் இவ்வாறான காலகட்டத்தில் சவால்களை சந்திக்க நேருகிறது. பிளவுகள் ஏற்படுகின்றன. கட்சித் தாவல்கள் இடம்பெறுகின்றன. உறுப்பினர்கள் பறித்தெடுக்கப்படுகிறார்கள். நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மன உணர்வுகளை கவனத்தில் எடுத்து முடிவை மேற்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது. என்று அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். இதனை கழுவுற தண்ணீரில் நழுவுற மீனின் கதையாகவே நோக்க வேண்டியுள்ளது. கலந்தாலோசனைக்கு மக்கள் எதிர்ப்பில்லை. ஆனால், அந்த கலந்தாலோசனைகள் சின்னத் திரை மெகா சீரியல் போன்று தொடர்வதனை பொதுசனத்தார் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
இதேவேளை, அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினரைச் சந்தித்து சில விடயங்களை தெரிவித்திருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் கருமலையூற்று பள்ளிவாசல் மற்றும் ஒலுவில் கடற்படை முகாம் போன்றவற்றுக்கான தீர்வை வழங்கியது. இருப்பினும் தங்களது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக முஸ்லிம் காங்கிரஸ்தான் அறிக்கை வெளியிட்டதே தவிர, அரச தரப்பு இந்த விடயத்தில் அலட்டிக் கொள்ளவில்லை. அரசு பக்கத்தில் முஸ்லிம்களின் ஆதரவை ஈர்த்தெடுக்கவே இவ்வாறானதொரு அறிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டதோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
இதேவேளை, கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பாக ஒரு மாதத்துக்கு முன்னர் அரசுடன் பேசுவதாக இருந்த போதும் அது இடம்பெறவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கமே இழுதடிப்புச் செய்திருந்தது என்பதே உண்மை. ஆனால், அரசின் இந்த பின்னடிப்பு தொடர்பில் எந்த அறிக்கையையும் முஸ்லிம் காங்கிரஸ் வெளியிடவில்லை. இந்த விடயமும் அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சியாகவும் நோக்க முடியும். இருப்பினும் இதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் குற்றம் சொல்வதும் தவறு. கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ ஹஸன் அலி கூட ஆளுந்தரப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து தவிர்ந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக முக்கிய அரசியல் கட்சிகளின் செயலாளர்களின் போக்குகளே ஒரு ஸ்டைலாகத்தான் உள்ளன.
இது தேர்தல் காலம் என்பதால் மில்லியன்கள், பில்லியன்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. இந்த விடயத்துக்குள் முஸ்லிம் காங்கிரஸையும் பொதுசனத்தார் இழுத்துப் போடாமலும் இருக்க வேண்டுமல்லவா?
முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கையை கடந்த வாரம் அரசாங்கம் நிறைவேற்ற தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷவின் அமைச்சரவையைச் சேர்ந்த பல சிங்கள அமைச்சர்கள் அதற்கு தங்களது முழுமையான எதிர்ப்பினையும் ஆட்சேபனையையும் தெரிவித்ததால் அது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும் நல்ல நகைச் சுவைதான் அரச தலைமை தர விரும்பியதனை அமைச்சர்கள் தடுத்து விட்டார்களாம்! அதுசும் இந்த அரசாங்கத்திலா?
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் அந்தக் கட்சியின் போராளிகள், வாக்காளர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் இன்று அரச தரப்பிலும் ஏற்படாமல் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டே கரையோர மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப் போவதில்லை என பல அமைச்சர்களும் கருதி அதனை அரச தலைமைக்கு கூறி கரையோர மாவட்ட மாவட்ட கோரிக்கையை நிராகரித்திருக்கவும் நியாயம் உண்டு.
மறுபுறத்தில் அமீர் அலிக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியும் கூட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசை விட்டு விலகிச் சென்றுள்ளது. அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கல்முனை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொண்டு அரசிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவும் கூடுமெனவும் பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டதன் காரணமாகவும் இந்தக் கோரிக்கையை செயற்படுத்தும் திட்டம் இறுதிக் கட்டத்தில் அரசினால் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, நிலைமைகள் எல்லாம் வெளிச்சத்தில் தெரிந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் இன்னும் இழுத்தடிக்கப்படுவது என்பது இன்று முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள், போராளிகள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்பது மட்டும் உண்மை.
நன்றி - ஏ.எச்.சித்தீக் காரியப்பர் (முகப்புத்தகம்)

0 Comments