வடக்கில் கிராம மக்களின் வாக்குகளைக் கொள்ளையிட 2000 ஆயிரம் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்துகின்றார்.
வடக்கிலிருக்கும் இராணுவ உயரதிகாரி ஒருவர் இந்த தகவலைத் தமக்கு கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சி அலுவலத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.குறித்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் :-
‘இராணுவத்திலிருக்கும் உயர் அதிகாரி ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு 2000 ஆயிரம் இராணுவத்தினர் சிவில் உடையில் வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த இரண்டாயிரம் இராணுவத்தினரும் இராணு சீருடை இல்லாமல் சிவில் உடையில் கிராமங்களுக்கு சென்று மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் செயற்பாடுகளிலும், வாக்கு கொள்ளையில் ஈடுபடுவதற்கும் பயண்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் கட்டம் கட்டமாக புகையிரதங்களில் வடக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை தபால் மூல வாக்களிப்பின் போது நடைபெறவிருந்த வாக்கு கொள்ளை, தேர்தல்கள் ஆணையாளரின் புத்திசாதுரியமான முடிவின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பின் போது யாருக்கு வாக்களிக்கப்படுகின்றது என வாக்குச்சீட்டைக் காண்பிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு முறையிட்டதனைத் தொடர்ந்து பலாலி, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களில் தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அவர்களின் மேற்பார்வையில் வாக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 90 வீதமான இராணுவத்தினர் மைத்திரிபாலசிறிசேனவிற்கு வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், பல இராணுவத்தினர் தாம் வெளிப்படையாகவே மைத்தரிபால சிறிசேனவிற்கு வாக்களித்ததாக கூறினர்’ என்றும் ராஜித்த சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

0 Comments