இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.
எனவே விபத்துக் குள்ளான விமானத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 90-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இருந்தும் மீட்பு பணிகள் இன்னும் முடியவில்லை. பலியானவர்களின் உடல்கள், விமானத்தின் பாகங்கள் முழுவதும் மீட்கப்பட வில்லை. அதற்கு மோசமான வானிலையே காரணம் என இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவான்மையின் தலைவர் ரியர் மார்ஷல் ஹென்றி பம்பாங் சோயலிஸ்டியோ தெரிவித்துள்ளார். பலத்த மழை, அதிவேக காற்று அதனால் ஏற்படும் உயரமான அதாவது 4 மீட்டர் உயர அலைகளால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் (கரிமட்டா ஜலசந்தி பகுதியில்) விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டது. அப்பகுதியில் நேற்று பலத்த மழையும், சூறாவளி காற்றும் வீசியதாலும், 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாலும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
தற்போது மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே, இதுவரை மீட்கப்பட்டுள்ள பிணங்களின் எண்ணிக்கை 9 அவர்களில் ஒரு பெண் பிணம் விமான பணிப்பெண் என அடையாளம் காணப் பட்டுள்ளது. மற்றொரு பெண் பயணி ஹயாதி லுத்பியா ஹமீது என தெரிய வந்துள்ளது. அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப் பட்டு உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட 9 பேரின் பிணங்களில் 6 உடல்கள் சுரபயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2 உடல்கள் பங்கல்யான் பின் என்ற இடத்தில் உள்ளது. ஒருவரது உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. பிணங்களுடன் பயணி களின் உடமைகளும் மீட்கப் பட்டுள்ளன. 2 பேக்குகள், ஒரு சூட்கேஸ், விமானத்தின் ஏணி மற்றும் விமானத்தின் சிதைந்த பகுதியும் மீட்கப் பட்டுள்ளது. விமான விபத்து குறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தவித தலையீடும் இன்றி விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் விமான போக்குவரத்து நிபுணர் ஜெப்ரீ தாமஸ் ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில் பயணிகளின் உடல்கள் விமானத்திற்குள் தான் இருக்க வேண்டும். விமானத்தின் உடைந்த உடற்பகுதி வழியாக வெளியே வந்த உடல்கள் தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன. விமானம் மோசமான வானிலையை எதிர்கொண்டதால் பயணிகள் நிச்சயம் சீட் பெல்ட் அணிந்திருப்பார்கள். அதனால் பல பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில் தான் இருக்கும் என்றார்.
0 Comments