தமிழ் மக்களின் காணிகளை ரிசாட் பதியுதீன் அபகரிப்பதாக ஜனாதிபதியிடம் முறையிட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மைத்திரியினூடாக அந்தக் காணிகளை பெற்றுக்கொள்ளுமா என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை தமிழ் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஏன் ஆதரவு வழங்குகிறது என்பது பற்றி இருதரப்பும் வட கிழக்கு மற்றும் தென்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மைத்திரி பொதுச் செயலாளராக இருந்தபோது, பாராளுமன்றத்தில் எந்த கருத்தையும் முன்வைக்காத மைத்திரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பது என்ன?
தேர்தலில் மைத்திரி வெற்றிபெற்று, அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எவ்வித உரிமையும் வழங்காது போய்விட்டால் என்ன செய்வதென்பது பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியில் இருக்கும்போது மைத்திரி, ஜனாதிபதியின் கொள்கையிலேயே இருந்தார். ஆனால் இப்போது குரோத அரசியல் நோக்கத்திற்காக எதிரணியில் இணைந்துகொண்டுள்ளார். இவ்வாறான ஒருவருக்கு ஆதரவு வழங்குவதைவிட, நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை நிகழ்த்திக்காட்டிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கலாமே?
முல்லைத்தீவிலும், மன்னாரிலும், வவுனியாவிலும் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக த.தே.கூ கடந்த காலங்களில் கூறிவந்தது. இந்தப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இப்போது கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது. ஜனாதிபதியுடன் இருந்தபோது கூடாதவர்கள், மைத்திரியுடன் இணைந்த பின்னர் நல்லவர்களா என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய நிதியை விட அதிகமான நிதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்டதாகவும், ஒவ்வொரு தடவையும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காமல் எதிரணிக்கு ஆதரவு வழங்கிவிட்டு வெற்றிபெற்ற பின்னர் அரசாங்கத்துடன் சேர்ந்துகொள்வதாகவும் கோட்டாயப தெரிவித்தார்.

0 Comments