Ticker

6/recent/ticker-posts

எயார் ஏசியா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி

எயார்  ஏசியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் பேரணி இந்தோனேசியாவின் சுரபயா பகுதியில் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதில் குடியிருப்புவாசிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த இரங்கல் பேரணியில் மெழுகுதிரிகளை ஏந்தி வந்த மக்கள் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து உயிரிழந்த உறவுகளுக்கு தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
எயார்  ஏசியாவிற்கு சொந்தமான QZ8501 ரக விமானம் ஞாயிற்றுக்கிழமையன்று 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு பயணித்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புறப்பட்ட சில மணிநேரங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்திருந்த எயார்  ஏசியா, ஜாவா கடற்பரப்பினை அண்மிக்கும் போது மாயமாகியிருந்ததாக விமான கட்டுப்பாட்டு அறை தெரிவித்திருந்தது.
8 நாடுகளின் உதவியுடன் மூன்று நாட்களாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை விமான பாகங்கள் மற்றும் சில உடல்கள் ஜாவா கடற்பரப்பில் மிதப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விமான பாகங்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவை எயார் ஏசியாவினுடையது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அத்துடன் தற்போது 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் தேடுதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், காலநிலை சீரின்மையால் தேடுதல் பணியை முன்னெடுப்பதில் மீட்புப் பணியாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த துயர சம்பவத்தை தொடர்ந்து புதுவருடப் பிறப்பான இன்று வியாழக்கிழமை சுரபயா பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments