பாராளுமன்றத் தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்
பொதுத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுத் தருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோளும் விடுத்தார். பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைப்பதே தமது நோக்கம் என்றும், தற்போது சிறுபான்மை பலத்தைக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் பெரும்பான்மைப் பலத்தைப் பெற கைக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
10ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, நிலையான பொருளாதாரத்த ஏற்படுத்தி நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
1977ஆம் ஆண்டு நடைபெற்ற மே தினக் கூட்டத்தை விட இன்றைய மே தினக் கூட்டத்தில் ஐ.தே.க. பலமாக உள்ளது. ஆதரவாளர்கள் குவிந்துள்ளார்கள். இதிலிருந்து எமது பலம் வெளிப்படுகின்றது.
100 நாட்களுக்குள் சிறுபான்மை பலத்தைக்கொண்டு நாம் செய்து முடித்த விசாலமான சேவையை மக்கள் மறக்கமாட்டார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதுடன், தொழிலாளர்களுக்கான பல காத்திரமான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
அதிலும் குறிப்பாக எம்மால் முடியாது என்று கூறிய 19 ஆவது திருத்தச் சட்டம் அமுலாக்கத்தை நாங்கள் செய்து காட்டி சாதனைப் படைத்துள்ளோம்.
இவை அனைத்தும் மக்களுக்கான குறுகிய கால நிவாரணங்களாகும். எனவே, நாம் மக்களுக்கு நீண்ட கால நிவாரணத்தை வழங்க வேண்டியுள்ளது.
இதனால் பாராளுமன்றத்தில் சிறுபான்மை பலத்தைக்கொண்ட எமக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொறும்பான்மைப் பலத்தைப் பெற்றுத் தர பொதுமக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்.
தற்போது நாங்கள் புதிய யுகத்தில் இருக்கின்றோம். மக்களுக்கு பயம் இல்லாது போயுள்ளதுடன் வாழ்வதற்கான சூழலை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
அரச ஊழியர்களுக்காள சம்பள உயர்வை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் தனியார்துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்கு அமைச்சரவையில் நாம் அங்கீகாரம் வழங்கியிருந்தோம்.
சிலர் மஹிந்தவைத் தோற்கடிக்க முடியாது என்று கூறினர். நாங்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். தற்போது சர்வதேசத்துடன் நாங்கள் நல்ல உறவைப் பேணி வருகின்றோம் என்றார்.

0 Comments