முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையில் ஐந்து மணித்தியாலங்களாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வார்டு தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
திவிநெகும நிதி மோசடி தொடர்பாக கொழும்பு நிதி மோசடி பிரிவினால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு கடுவெல நீதிவான் முன் ஆஜர்படுத் தப்பட்டார்.
அவரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதன் பின் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பசில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரும் பசில் ராஜபக்ஷவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டது ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியில் கம்பஹா மாவட்டத்திலாகும்.
இவ்வாறு ஒரே கட்சியில் ஒரே மாவட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறாக செயற்பட்ட இவர்கள் இருவரும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துரையாடியது என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆராயத் தொடங்கியுள்ளது.
ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

0 Comments