Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியினால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியினால் சபை நடவடிக்கைகள் நாளை (07) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று (06) நடைபெறவிருந்தது.
எதிர்கட்சியினரால் இந்த பிரேரணை முன்வைக்கப்படவிருந்த நிலையில், இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கருத்துக்களை கூறினார்.

இந்த விவாதத்திற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் தொடர்பில் திருப்தியடைய முடியாதென இதன்போது அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்கட்சி வரிசையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி தனியொரு பிரிவாக அங்கீகரிக்கப்படாததால் நேர ஒதுக்கீட்டில் சிக்கல் உள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.
எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் எதிர்கட்சியின் பிரதம கொரடா, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்கவும் இதன்போது தமது நிலைப்பாட்டை அறிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தொடர்ந்தும் அமளியில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கு மேலதிகமாக 30 நிமிடத்தை ஒதுக்கமுடியுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
எனினும், இதனை ஏற்க மறுத்த ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தொடர்பில் சபாநாயகர் விளக்களிக்க வேண்டுமென தொடர்ந்தும் கோஷம் எழுப்பினர்.
இன்றைய விவாதத்திற்குரிய நேரத்தில் 28 நிமிடங்கள் அமளியால் விரையமானதை அடுத்து, சபை நடவடிக்கைகளை நாளை (07) காலை 10.30 வரை ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஒரு நாள் அமர்வை நடத்துவதற்கு 4 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments